4வது ஆஷஸ் டெஸ்ட்-ஆஸி. இன்னிங்ஸ் வெற்றி
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந் நிலையில் நான்காவது டெஸ்ட் லீட்சில் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 102 ரன்களுக்கு சுருண்டு ஏமாற்றம் அளித்தது. அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து சுமார் 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து படுமட்டமாக விளையாடியது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். இங்கிலாந்து 120 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தவித்தது.
கடைசிக்கட்டத்தில் வந்த சுவான் 62, பிராட் 61 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 5, ஹில்பென்ஹாஸ் 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 20ம் தேதி லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications