ஒலிம்பிக் ஹாக்கி: பாகிஸ்தான் மோசமான தோல்வி-8வது இடம்!
பெய்ஜிங்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 8வது இடத்தைப் பிடித்து மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. அதன் ஒலிம்பிக் வரலாற்றில் இவ்வளவு மோசமான இடத்திற்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்தியா இந்த முறை கலந்து கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டது. இருப்பினும் மற்ற போட்டிகளில் இந்தியர்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணி, தனது ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக மோசமான இடத்தைப் பெற்றுள்ளது.
இன்று நடந்த போட்டியில் நியூசிலாந்திடம் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று 8வது இடத்திற்கு அது தள்ளப்பட்டது.
கடந்த 15 ஒலிம்பிக் போட்டிகளில் இதுதான் பாகிஸ்தான் ஹாக்கி அணி பெற்றுள்ள மோசமான இடமாகும்.
ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் 3 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications