டுவென்டி-20 உலக கோப்பையை வென்றது பாகிஸ்தான்

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்தது. நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.
கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் பைனல் வரை சென்று கோப்பையை கோட்டைவிட்ட பாகிஸ்தான் இம்முறை எப்படியும் கோப்பையுடன் தான் நாடு திரும்புவது என்ற லட்சியத்துடன் பந்துவீசியது. தில்ஷன் (0), ஜெயசூர்யா (17), முபாரக் (0), ஜெயவர்தனா (1) என டாப் ஆர்டர் வீரர்களை வரிசையாக அவுட்டாக்கியது.
இதையடுத்து இலங்கை 32 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது. அடுத்து வந்த சமர சில்வா 14 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து ஆங்லோ மேத்திவ்ஸ் வந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அரையிறுதியில் பந்துவீச்சில் மிரட்டிய இவர், நேற்று பேட்டிங்கின் போது சங்ககராவுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.
சங்ககரா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 64 ரன்கள் எடு்த்தார். மேத்திவ்ஸ் 24 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.
எளிதான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு கம்ரன் அக்மல் ஷாசாயிப் ஹசன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அக்மல் 39, ஹசன் 19 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த அப்ரிதி அதிரடியாக பேட் செய்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். பாகிஸ்தான் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, கோப்பையை கைப்பற்றியது.
இங்கிலாந்து பெண்கள் சாம்பியன்...
நேற்று நடந்த பெண்கள் டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து பெண்கள் அணி 20 ஓவரில் 85 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 17 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து, சொந்த மண்ணில் கோப்பை வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications