இனவெறி சர்ச்சையில் ஹர்பஜன் சிங் - நாளை விசாரணை

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சை இனவெறி வார்த்தைகளால் திட்டியதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தபோது, சைமண்ட்சை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் கேலி செய்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது.
தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மீது இனவெறி புகார் எழுந்துள்ளது.
சிட்னியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின்போது, ஹர்பஜன் சிங்குக்கும், சைமண்ட்சுக்கும் இடையை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் இருவரையும் சச்சின் டெண்டுல்கர், மாத்யூ ஹைடன், நடுவர்கள் பென்சன், பக்னர் ஆகியோர் தலையிட்டு சமாதானப்படுத்தினர். ஆட்டம் முடிந்த பின்னர் ஹர்பஜன் சிங் தன்னை இனவெறி வார்த்தைகளால் கேலி செய்தார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவரிடம் சைமண்ட்ஸ் புகார் அளித்தார். அவருக்கு ஆதரவாக கேப்டன் ரிக்கி பான்டிங்கும் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து ஹர்பஜன் மீது நாளை விசாரணை நடக்கவிருக்கிறது. நாளைய விசாரணையில் சைமண்ட்ஸுக்கு ஆதரவாக ரிக்கி பாண்டிங், மாத்யூ ஹைடன், கில்கிறைஸ்ட் உள்ளிட்ட ஐந்து ஆஸ்திரேலிய வீரர்கள் சாட்சியம் அளிக்குள்ளனர்.
ஹர்பஜன் சிங் கேலி செய்தது உண்மை என்பது நிரூபணம் ஆனால், 4 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.
இனவெறி இல்லை - டெண்டுல்கர்
இதற்கிடையே, ஹர்பஜன், சைமண்ட்ஸ் இடையிலான வாக்குவாதம் சாதாரணமானதுதான். இனவெறியுடன் கூடிய மோதல் இல்ைல என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்கள் இருவரும் சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டனர். இது போன்ற மோதல்கள் நடப்பது சகஜம் தான். கிட்டத்தட்ட தினசரி நடக்கத்தான் செய்கிறது. இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றார்.
ஹர்பஜன் சிங் கூறுகையில், நான் இனவெறியை தூண்டும் வகையில் எதுவும் பேசவில்லை. சைமண்ட்சிடம் சாதாரணமாகத் தான் பேசினேன் என்றார்.
திசை திருப்பும் முயற்சி?
ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த திடீர் புகாரில் உள்நோக்கம் இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸின்போது, நடுவர் பக்னர் பல தவறுகளைச் செய்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகி விட்டது. குறிப்பாக சொற்ப ரன்களில் அவுட் ஆகியிருக்க வேண்டிய சைமண்ட்ஸ், நடுவரின் தவறான தீர்ப்பால் சதம் அடித்து அணியின் ஸ்கோரை பலப்படுத்தி விட்டார்.
தான் அவுட் ஆனது தனக்குத் தெரியும், இருந்தாலும் நடுவர் சொல்லாததால் தான் வெளியேறவில்லை என்றும் சைமண்ட்ஸ் கூறியிருந்தார்.
நடுவர் பக்னரின் தீர்ப்புகள் இந்திய முன்னாள் வீரர்கள் பலரை கோபப்படுத்தியுள்ளது. அவரை காட்டமாக சாடியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில்தான் சைமண்ட்ஸை ஹர்பஜன் திட்டி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடுவர் சர்ச்சையை திசை திருப்பும் வகையில் ஆஸ்திரேலியத் தரப்பில் இதுபோன்ற புகார் கிளப்பப்படுவதாக புது சர்ச்சை எழுந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications