முத்தரப்பு கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இன்று கான்பெராவில் இந்தியாவும், இலங்கையும் மோதின.
போட்டியின் துவக்கத்தில் இன்று மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக துவங்கியது. அதனால் நடுவர்கள் போட்டியை 29 ஓவர்களாக குறைத்தனர். டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
இதனால் முதலில் பேட்டிங்கைத் துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஷேவக்கும், சச்சின் டெண்டுல்கரும் களமிறங்கினர்.
ஷேவக் 14 ரன்கள் எடுத்திருந்தபோது குலசேகராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கவுதம் காம்பிர்-சச்சின் ஜோடி அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது நன்றாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் 32 ரன்களுக்கு மஹ்ரூப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித் சர்மா கவுதம் காம்பிருடன் சேர்ந்து இலங்கை அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டார்.
கவுதம் காம்பிர் 35 ரன்களை எடுத்திருந்த போது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகிவிட்டார். பின்னர் களமிறங்கிய கேப்டன் டோணி-ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது டோணியும் ரன்அவுட் ஆகிவிட்டார்.
அதன் பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் வழக்கம் போல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் இந்த தொடரில் எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 64 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெற்றிக்கு 196 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தில்சானும், ஜெயசூர்யாவும் அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணியினரை நிலைகுலையச் செய்தனர்.
ஜெயசூர்யா 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சங்ககரா 10 ரன்களில் ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜெயவர்தனேயும், தில்ஷானும் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடினர்.
குறிப்பாக ஸ்ரீசாந்தின் பந்து வீச்சை நையப்புடைத்தனர். ஸ்ரீசாந்த் 3 ஓவர்கள் வீசி 48 ரன்களை வாரி வழங்கி விட்டார்.
இலங்கை அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால் மேலும் ஆட்டத்தை தொடர முடியாததால், இறுதியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இலங்கை அணியின் தில்ஷான் 62 ரன்களும், ஜெயவர்தனே 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 71 பந்துகளில் 85 ரன்களை குவித்தது.
ஆட்டநாயகன் விருது இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷானுக்கு வழங்கப்பட்டது.
இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இலங்கை 6 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications