மும்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 10 கோடி பரிசு போனஸாக அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரை இந்தியா அபாரமாக வென்றுள்ளது. இதுவரை அங்கு நடந்துள்ள முத்தரப்புத் தொடர்களில் 3 முறை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஆனால் ஒருமுறை கூட வென்றதில்லை. இப்போதுதான் அந்த வெற்றி கை கூடியுள்ளது.
கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரை இந்தியா வென்றுள்ளது.
இந்த சாதனையை பாராட்டும் வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 10 கோடி போனஸ் அளிக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளில் ஒருவரான ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், இந்திய அணிக்கு ரூ. 10 கோடி போனஸ் வழங்கப்படும் என கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
மார்ச் 6ம் தேதி டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படும். டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.