ஜோகன்னஸ்பர்க்: நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
மினி உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த பி பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு ரைடர் 8, குப்டீல் 21 ரன்களுக்கு விரைவில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து வந்த ரோஸ் டெய்லர், மெக்கலத்துக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மெக்கலம் 44 ரன்களுக்கு அவுட்டானார்.
பொறுமையாக விளையாடிய ரோஸ் டெய்லர் 2 சிக்சர் 6 பவுண்டரி உட்பட 108 பந்தில் 72 ரன்கள் எடுத்தார். எலியாட் 39 ரன்கள் எடுத்து இவருக்கு துணை நின்றார்.
மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து கடைசி 6 விக்கெட்டை 43 ரன்களுக்கு இழந்தது. 47.5 ஓவரில் 214 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அடுத்து பேட் செய்த தென் ஆப்ரிக்காவுக்கு கேப்டன் ஸ்மித் 7 ரன்களுக்கு அவுட்டாகி, சிறப்பான துவக்கத்தை தர மறுத்தார். ஆம்லா 38, காலிஸ் 36 ரன்கள் எடுத்தனர்.
பொறுப்புடன் ஆடிய டிவிலியர்ஸ் 70 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். தென் ஆப்ரிக்கா 41.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து வென்றது.
நாளை இந்தியா-பாக். மோதல்...
இன்று நடக்கும் போட்டியில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை இந்திய அணி, பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸையும் சந்திக்கின்றன.