டெல்லி: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோணியை நியமிக்கலாம் என சச்சின் டெண்டுல்கர்தான் பரிந்துரைத்தார் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
மூத்த வீரர்கள் அணிக்குத் தேவையில்லை. இளம் வீரர்கள் மட்டுமே போதும் என்று பேச ஆரம்பித்துள்ளார் டோணி. இது மூத்த வீரர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டோணியை கேப்டன் பொறுப்பில் நியமிக்கலாம் என பரிந்துரைத்ததே ஒரு மூத்த வீரர்தான் என்று சரத்பவார் கூறி டோணியை நெளிய வைத்துள்ளார். அந்த மூத்த வீரர் வேறு யாருமல்ல, சச்சின் டெண்டுல்கர்தான்.
இதுகுறித்து சரத்பவால் அளித்துள்ள பேட்டியில், இங்கிலாந்து தொடருக்குப் பின்னர் நாடு திரும்பிய இந்திய அணி பெரும் நெருக்கடியில் இருந்தது. கேப்டன் டிராவிட், அப்பொறுப்பிலிருந்து விலக விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார்.
கேப்டன் பொறுப்பில் வேறு யாரையாவது நியமித்துக் கொள்ளுங்கள், நான் விளையாட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றார் டிராவிட். இதையடுத்து சச்சினை கேப்டன் பொறுப்பில் நியமிக்கலாம் என தேர்வாளர்கள் தீர்மானித்தனர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தயவு செய்து அதை மட்டும் செய்து விடாதீர்கள். டோணிக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்கள். அவருக்கும், சக வீரர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே அவர்தான் சரியாக இருப்பார் என்றார்.
எனக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் கிடையாது. இருந்தாலும் நீங்கள் சொல்வதை அப்படியே தேர்வாளர்களிடம் சொல்கிறேன் என்று சச்சினிடம் நான் தெரிவித்தேன். அவரது விருப்பப்படியே டோணி கேப்டனாக்கப்பட்டார்.
சச்சின், டிராவிட், கும்ப்ளே, கங்குலிக்குப் பாராட்டு:
அதேபோல, 20-20 உலகக் கோப்பைப் போட்டியின்போது இளம் வீரர்களுக்காக தாங்களே முன்வந்து வழி விட்டனர் சச்சின், டிராவிட், கங்குலி மற்றும் கும்ப்ளே ஆகிய மூத்த வீரர்கள். இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன்.
சச்சின் என்னிடம் வந்து, அணித் தேர்வில் நீங்கள் தலையிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 20-20 அணிக்கு எனது தலைமுறை வீரர்களை விட்டு விட்டு இளம் தலைமுறை வீரர்களை தேர்வு செய்யச் சொல்லுங்கள்.
நாங்கள் இந்த விளையாட்டுக்குப் பொருத்தமானவர்கள் இல்லை. எனவே இளைஞர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று தெரிவித்தார். அதன் பிறகே அணியில் இளம் வீரர்கள் நிறைய தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட்டின் புகழுக்கும், பெருமைக்கும், சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, லட்சுமண் போன்ற மூத்த வீரர்களின் பங்கு அபாரமானது. அவர்கள் அர்ப்பணிப்பு மனதுடையவர்கள். அவர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களை யாரும் குறைத்துப் பேச முடியாது என்று கூறியுள்ளார் பவார்.
மேலும், இந்திய அணியின் சமீபத்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது கும்ப்ளே நடந்து கொண்ட விதத்தையும் பவார் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கும்ப்ளே குறித்து பவார் கூறுகையில், டெஸ்ட் கேப்டனாக அனுபவ அனில் கும்ப்ளே அசத்தி வருகிறார். களத்துக்கு உள்ளே மற்றும் வெளியே இவரது நடத்தை மிகச் சிறப்பாக உள்ளது.
சிட்னி டெஸ்டில், ஹர்பஜன்-சைமண்ட்ஸ் இடையே ஏற்பட்ட சர்ச்சையை சிறப்பாக கையாண்டு அழகாக சமாளித்தார். இரண்டு அணிகளில் ஒன்று மட்டுமே விளையாட்டு உணர்வுடன்' செயல்பட்டது என்று அடக்கத்துடன் சொன்னார். உண்மையை சொல்லப் போனால், இவர் நாட்டின் தூதராக செயல்பட்டார். ஒட்டுமொத்த சர்ச்சையை இவர் சாமர்த்தியமாக கையாண்ட விதத்தை நினைத்து நிச்சயமாக பெருமைப்படலாம் என்றார் பவார்.