சென்னையில் போட்ட செஞ்சுரி மும்பை மக்களுக்கு சமர்ப்பணம்: டெண்டுல்கர்
சென்னை: முதல் டெஸ்ட் போட்டியில் நான் அடித்த சதத்தை மும்பை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். மும்பை மக்களைக் காக்கும் முயற்சியில் உயிர் நீத்த பாதுகாப்புப் படையினருக்கு சல்யூட் செய்கிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கர் தனது 41வது சதத்தைப் பதிவு செய்து, இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்த சதத்தை மும்பை மக்களுக்கு சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார்.
போட்டிக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்த சதத்தால் துயரத்தில் மூழ்கியிருக்கும் மும்பை மக்களுக்கு லேசான புன்னகையை வரவழைக்க முடியும் என்றால் அது எனக்கு மகிழ்ச்சிதான்.
மற்ற விஷயங்களை மறக்கக் கூடிய வல்லமை கிரிக்கெட்டுக்கு இல்லை. ஆனால் துயரத்தை குறைத்து மகிழ்ச்சியை வரவழைக்க கிரிக்கெட்டால் முடியும். அந்த வகையில் இந்தசதம், மும்பை மக்களை மகிழ்ச்சிப்படுத்தினால் எனக்கு சந்தோஷம்தான்.
இந்த சதத்தால் மும்பை மக்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் துயரத்திற்கு இது ஒரு ஆறுதலாக இருக்கும்.
இது மிகவும் சிறப்பான சதமாகும். காரணம் இந்தியா வென்றுள்ளது. எனவே எனக்கு இது சிறப்பான சதமாகும்.
இருப்பினும் இங்கு நடந்ததை விட மும்பையில் நடந்தது மிகவும் பெரியது, கொடுமையானது. மும்பை பயங்கரத்தின் போது தங்களது குடும்பத்தினரை, நண்பர்களை, உற்றார் உறவினரை இழந்த மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.
மும்பையில் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதிலிருந்து மீளுவது கடினம்.
இந்தியா வெற்றி பெறுவதினாலோ அல்லது நான் சதம் அடிப்பதினாலோ அந்த துயரத்தை மறைத்து விட முடியாது. இது அனைவருக்கும் அளப்பறிய இழப்பு. அவர்களுக்கு கிரிக்கெட் உலகம் துணையாக இருக்கும்.
அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் நாங்கள் உதவுவோம்.
இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு கமாண்டோப் படையினர், தாஜ் ஹோட்டல் ஊழியர்கள், காவல்துறையினர், பொதுமக்கள், தீயணைப்புப் படையினர், கடற்படையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நான் சல்யூட் செய்கிறேன்.
மீண்டும் இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் ஆடுவதற்காக இங்கிலாந்து அணியை நான் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன். மக்களும் வழமையான முறையில் கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்துப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் சச்சின்.


Click it and Unblock the Notifications