மெண்டிஸ் சுழலில் சுருண்டது இந்தியா - சச்சின் சொதப்பல்

கொழும்பில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று, காலி டெஸ்ட் போட்டியில் வென்று, 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் சம நிலையில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பு சரவணமுத்து ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஷேவாக்கும், கம்பீரும் களம் இறங்கினர். வழக்கம் போல ஷேவாக் பட்டாசாக பொரிந்தார். பெரிய ஸ்கோரை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷேவாக் துரதிர்ஷ்டவசமாக 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 21 பந்துகளில் இந்த ரன்களை எட்டினார் ஷேவாக். தம்மிகா பிரசாத்தின் பந்தில் ஆட்டமிழந்தார் ஷேவாக்.
மறு முன்னையில் கம்பீர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நட்சத்திர வீரர்களான டிராவிடும், சச்சினும் மீண்டும் ஒரு ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டிராவிட் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சினின் பங்கு 6 ரன்களாகும். இவர்கள் இருவரையும் தம்மிகா பிரசாத்தே அவுட் ஆக்கினார்.
கம்பீரும், கங்குலியும் சேர்ந்து சற்று நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். கம்பீர் மீண்டும் ஒரு பொறுப்பான ஆட்டத்தைக் காட்டி 72 ரன்களைச் சேர்த்து ஓய்ந்தார்.
மறு முனையில் கங்குலி 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முரளிதரன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த பார்த்திவ் படேல் (13), கும்ப்ளே (1), ஹர்பஜன் சிங் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இஷாந்த் சர்மா 17 ரன்கள் எடுத்தார்.
ஆனால் கடைசியாக களம் இறங்கிய ஜாகிர் கான் மிக மிகப் பொறுமையாக ஆடி 32 ரன்களைச் சேர்த்து மூத்த வீரர்களுக்கு நல்ல பாடம் கற்பித்தார்.
இந்தியாவை மீண்டும் ஒரு முறை மெண்டிஸ் புரட்டிப் போட்டார். அவரது பந்து வீச்சில் இந்திய வீரர்கள் சடசடவென விழுந்தனர். கம்பீர், லட்சுமண் உள்ளிட்ட 5 விக்கெட்களை வீழ்த்தினார் மெண்டிஸ். முரளிதரன் 2 விக்கெட்களை சாய்த்தார்.
பின்னர் இலங்கை தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வான்டார்ட்டும், வர்னபுராவும் நிதானமாக ஆடத் தொடங்கினர். வர்னபுரா 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இஷாந்த் சர்மா அவரை அவுட் ஆக்கினார்.
ஆட்ட நேர இறுதியில், இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications