For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், லாரா கிரிக்கெட் மேதைகள் இல்லையாம் - கூறுகிறது ஐசிசி பட்டியல்

By Staff

டெல்லி: உலகின் தலை சிறந்த வீரர்களாக கருதப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், மேற்கு இந்தியத் தீவுகளின் பிரையன் லாரா ஆகியோரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் கவுன்சிலின் மேதை வீரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு வராத ஐசிசிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் உலகின் தலை சிறந்த மேதை வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் டெஸ்ட் பட்டியலின், முதல் பத்து இடங்களுக்குள் லாரா மற்றும் சச்சினின் பெயர் இடம் பெறவில்லை.

டெஸ்ட் பட்டியலில் சச்சினுக்கு 26வது இடத்தையும், ஒரு நாள் பட்டியலில் 12வது இடத்தையும் கொடுத்து அசிங்கப்படுத்தியிருக்கிறது ஐசிசி.

ஆனால் இலங்கையின் சங்கக்காரா, பான்டிங், மாத்யூ ஹெய்டன், கல்லிஸ், முகம்மது யூசுப், போன்றோர் சச்சினுக்கு முன்னர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ஒரு நாள் பட்டியலில் லாராவுக்கு 7வது இடத்தைக் கொடுத்துள்ள ஐசிசி, சச்சினை 12வது இடத்தில் வைத்திருக்கிறது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்களைக் குவித்துள்ளவரும், அதிக செஞ்சுரிகளைப் போட்டுள்ளவருமான சச்சினை ஐசிசி இப்படி அசிங்கப்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் 156 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 41 செஞ்சுரிகளை அடித்து, 12 ஆயிரத்து 429 ரன்களைக் குவித்துள்ளார்.

அதேபோல, 419 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, 42 செஞ்சுரிகளுடன் 16 ஆயிரத்து 422 ரன்களைக் குவித்துள்ளார்.

சச்சினை இவ்வாறு பட்டியலில் தரம் இறக்கியிருப்பது இந்திய ரசிகர்களை வேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

டெஸ்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் முதலிடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் உள்ளார். சங்கக்காராவுக்கு 6வது இடம். ஹெய்டனுக்கும், கல்லிஸுக்கும் 10வது இடம்.

ஒரு நாள் போட்டி வரிசையில், விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடம் ஜாகிர் அப்பாஸ். ஜாவேத் மியான்டட்டுக்கு 6வது இடத்தைக் கொடுத்துள்ளனர்.

கடும் விமர்சனம் ..

ஐசிசியின் இந்தப் பட்டியலை இந்தியாவின் முன்னாள்வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர். முன்னாள் பந்து வீச்சாளர் மணீந்தர் சிங், இந்தப் பட்டியலை ஒரு ஜோக் என வர்ணித்துள்ளார்.

இதுபோன்ற சாடிஸ்ட் பட்டியலை தயவு செய்து ஐசிசி வெளியிடாமல் இருப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.

12 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ள சச்சின் கிரேட் வீரர் இல்லை என்று கூறினால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்த ஜோக்கர்களால் அனைவரும் மனம் வெறுத்துப் போயுள்ளோம் என்றார் அவர்.

கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து ஐசிசி ஒரு சால்ஜாப்பு விளக்கத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீரர்களின் ஒட்டுமொத்த திறமையையும், அவர்களது சிறப்பையும் இந்தப் பட்டியல் வெளிப்படுத்தவில்லை.

மாறாக, ஒவ்வொரு வீரரும், அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில், எப்போது அதிக பட்ச சிறப்பிடத்தில் இருந்தார்களோ, அந்த புள்ளிகளின் அடிப்படையில்தான் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி இந்த பட்டியலி்ல் மேலே உள்ள வீரர்களை விட கீழே உள்ள வீரர்கள் சிறப்பு குறைந்தவர்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

இருப்பினும், வீரர்களின் உண்மையான சிறப்பம்சத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ரேங்க் அளிக்கப்படவில்லை என்பதை ஐசிசி ஏற்றுக் கொள்கிறது.

இதன் காரணமாக தலை சிறந்த வீரர்களாக கருதப்படும் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், வாலி ஹேமன்ட், கிரேக் சேப்பல் உள்ளிட்ட சிலர் டாப் 20 பட்டியலில் (டெஸ்ட்) இடம் பெறாமல் போயுள்ளனர்.

ஆனால் ஐசிசி பட்டியலில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற இந்திய வீரர்கள் - கவாஸ்கர் (20), டிராவிட் (30), விஸ்வநாத் (45), விஜய் ஹஸாரே (48), ஷேவாக் (51), வெங்சர்க்கார் (61), பாலி உம்ரிகர் (98).

ஒரு நாள் பட்டியல் - கங்குலி (21), அஸாருதீன் (36), டோணி (39), சித்து (50), கபில் தேவ் (54), ஷேவாக் (56), யுவராஜ் சி்ங் (69), டிராவிட் (69), வெங் சர்க்கார் (72), கவாஸ்கர் (77), காம்ப்ளி (81), மஞ்ச்ரேகர் (96), சந்தீப் பாட்டில் (99), ஸ்ரீகாந்த் (100).

Story first published: Wednesday, December 7, 2011, 18:22 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+