For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் - ரிக்கி என்ன வித்தியாசம்?

Sachin and Ponting
சென்னை: சச்சினையும், ரிக்கி பான்டிங்கையும் எப்படி ஒப்பிடலாம் என்று சிலர் கேட்கலாம். இனவெறி பிடித்த ஒரு ஆஸ்திரேலிய வீரரை எப்படிப் புகழ்ந்து பேசலாம் என்று கூட கேட்கலாம். நிச்சயம் இவை சரியான கேள்விகள்தான். ஆனால் கிரிக்கெட் என்று மட்டும் பார்த்தோமானால் இருவரையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதிலும் நல்லதொரு வீரர் என்று மட்டும் பார்த்தோம் என்றால் ரிக்கியைப் புகழாமலும் இருக்க முடியவில்லை.

ரிக்கி பான்டிங் ஒரு சாதாரண வீரராகவோ அல்லது கேப்டனாகவோ மட்டும் இருக்கவில்லை. மாறாக, உலக கிரிக்கெட் வீரர்களுக்கே அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்கியவர். இதை நிச்சயம் அவரது பரம விரோதிகள் கூட மறுக்க முடியாது. அவரது ரெக்காடுகளைப் பார்த்தாலே அது புரியும்.

சச்சின் கிரிக்கெட் ஆட வந்தது 1989ம் ஆண்டு. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தானில் வைத்து அவரைக் களம் இறக்கினார் அப்போதைய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். முதலில் டெஸ்ட் போட்டியில்தான் அறிமுகமானார் சச்சின். பின்னர் டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார். இரண்டுமே பாகிஸ்தான் தொடரில்தான் நடந்தது.

ரிக்கி பான்டிங் ஆஸ்திரேலிய அணியில் இணைந்தது 1995ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில். அதே ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளிலும் ஆட ஆரம்பித்தார்.

ரிக்கியை விட வயதில் மூத்தவர் சச்சின். அதாவது சச்சினுக்கு 39 வயதாகிறது. ரிக்கிக்கு 37 முடிந்து 38 வயது பிறக்கப் போகிறது.

சாதனைகள் என்று பார்த்தோமானால் சச்சினிடம்தான் நிறைய உள்ளன. அதேசமயம், அவருக்கு கிட்டத்தட்ட நிகரான சாதனைகளை ரிக்கியும் வைத்துள்ளார்.

அதிக ரன் குவிப்பில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின். அவரது டெஸ்ட் ரன் குவிப்பு 15,546 ஆகும். ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். ரிக்கியின் டெஸ்ட் ரன்கள் 13,366. ஒரு நாள் போட்டி ரன்கள் 13,704

சச்சின் போட்ட டெஸ்ட் சதங்கள் 51 ஆகும். ரிக்கியின் பங்கு 41. சச்சின் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை விளாசியுள்ளார். ரிக்கி ஒரு நாள் போட்டிகளில் 30 சதங்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் அரை சதம் என்று பார்த்தால் சச்சினும், ரிக்கியும் ரொம்ப வித்தியாசமாக இல்லை. சச்சின் 65 அரை சதம் எடுத்துள்ளார். ரிக்கியின் பங்கு 62 ஆகும். ஒரு நாள் போட்டிகளில் சச்சின் 96 அரை சதங்களை எடுத்துள்ளார். ரிக்கியின் பங்கு 80 ஆகும்.

ஒரு கேப்டனாக உலக சாதனை படைத்தவர் ரிக்கி. ஆனால் இதில் சச்சின் பெரும் பூஜ்யம் என்பதை சச்சினே ஒத்துக் கொள்வார். கேப்டன் பதவியைப் பார்த்து அலர்ஜி வந்து ஓடியவர்தான் சச்சின். அவர் கேப்டனாக திணிக்கப்பட்டவர். அதேசமயம் ரிக்கியைத் தேடி கேப்டன் பதவி இயல்பாக வந்து சேர்ந்தது.

முதல் முறை கேப்டனான பின்னர் சச்சினின் பேட்டிங் படு மோசமாக மாறியது. சொதப்பித் தள்ளினார். இதனால்தான் அவரை கேப்டன் பதவியிலிருந்து தூக்கினர். பின்னர் மீண்டும் ஒரு கேப்டனாக்கிப் பார்த்தனர். அப்போதும் அவர் பாஸாகவில்லை. இதனால் அவரை நிரந்தரமாக கேப்டன் பதவிக்கான பரிந்துரையிலிருந்தே விலக்கி விட்டனர்.

மொத்தம் 25 டெஸ்ட் போட்டிகளுக்கு சச்சின் கேப்டனாக இருந்தார். அதில் 9ல் மட்டுமே வென்றார். 4ல் தோற்றார். 12 டிரா ஆனது. 73 ஒரு நாள் போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்த சச்சின் 23ல் மட்டுமே வெற்றித் தேடித் தந்தார். 43ல் தோல்வி அடைந்தார். 2 டை ஆனது. 6 முடிவில்லாமல் போனது.

ஆனால் கேப்டனான பின்னரும் கூட ரிக்கி தனது பேட்டிங்கை சரிய விடாமல் நிலையாக வைத்திருந்தார். அத்தோடு மட்டுமல்லாமல் கேப்டனான பின்னர்தான் அவரது பேட்டிங் பின்னிப் பெடலெடுத்தது. ஆஸ்திரேலியாவின் கேப்டனாக 48 டெஸ்ட் போட்டிகளிலும், சாதாரண வீரராக 100 போட்டிகளிலும் வென்று காட்டிய ஒரே வீரர், ஒரே கேப்டன் உலக அளவில் ரிக்கி மட்டுமே. இது ஒரு சாதனையாகவும் இன்று வரை உள்ளது.

ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் எல்லோரும் ரிக்கியைத்தான் கை காட்டுவார்கள். காரணம், அப்படி ஒரு கட்டுக்கோப்பான, கண்டிப்பான, துடியான கேப்டனாக இருந்தவர் ரிக்கி.

உலகக் கோப்பையை வென்றதிலும் கூட சாதனை படைத்தவர் ரிக்கிதான். ஸ்டீவ் வா தலைமையில் ஒரு முறையும், தனது தலைமையில் 2 முறையும் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்தவர் ரிக்கி.

ஆனால் சச்சின் இந்த விஷயத்தில் இந்தியாவை உயர்த்தத் தவறியவர். 23 ஆண்டு காலமாக நட்சத்திர வீரராக, கிரிக்கெட் சூப்பர் ஸ்டாராக, நம்பிக்கை நட்சத்திரமாக அவர் ஜொலித்தாலும் கூட அவரால் உலகக் கோப்பையை வெல்லவே முடியவில்லை.

ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டிகள் 1975ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் முதல் இரு கோப்பைகளை மேற்கு இந்தியத் தீவுகள் வென்றது. 3வது கோப்பையை 1983ம் ஆண்டு இந்தியா வென்றது. கபில்தேவின் பிரில்லியன்ட்டான அணுகுமுறையும், ஒருங்கிணைப்பும், துடிப்பான உத்திகளும் அதற்குக் காரணமாக அமைந்தன - சச்சினின் குருவான கவாஸ்கர் இந்தியாவின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1992 உலகக் கோப்பைப் போட்டி முதல் இந்திய அணியில் இடைவிடாமல் பங்கெடுத்து வருகிறார் சச்சின். 1992, 1996, 1999, 2003, 2007, 2011 ஆகிய 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதில் 2003 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா அரை இறுதி வரை தகுதி பெற்றது. அப்போது கேப்டனாக இருந்தவர் கங்குலி. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மிக மோசமான முறையில் தோற்று கோப்பையை மயிரிழையில் நழுவ விட்டது இந்தியா.

அந்த உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் இத்தனைக்கும் சிறப்பாகத்தான் ஆடினார். தொடர் நாயகன் விருதையும் கூட வென்றார். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் சரிவர ஆடவில்லை. வெறும் 4 ரன்கள்தான் எடுத்தார். இது கூட அப்போது சர்ச்சையானது. கங்குலிக்கும், சச்சினுக்கும் ஈகோ மோதல் என்று கூட பேச்சுக்கள் வந்தன.

ஒரு தனிப்பட்ட வீரராக மிகப் பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சச்சின் மட்டுமே. அந்த வகையில் உலக அளவில் எந்த வீரருமே இப்படிப்பட்ட சாதனைகளைக் குவித்ததில்லை. அதேசமயம், ஒரு அணி வீரராக சச்சின் பெரிய அளவில் இந்தியாவுக்கு பயன்பட்டதில்லை. ஆனால் ரிக்கி பான்டிங் அப்படி இல்லை. ஒரு தனிப்பட்ட வீரராகவும் அவர் ஜொலித்திருக்கிறார். அணியைத் தூக்கி விட்டவராகவும் இருந்திருக்கிறார்.

அதேசமயம், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதிலும் சாதனையாளராக இருக்கிறார் சச்சின். விளம்பரப் படங்களில் நடித்துக் குவிப்பதில் சர்ச்சையில் அடிபட்டார். மற்ற வீரர்களுக்கு வழி விடாமல் எக்ஸ்ட்ரா லக்கேஜ் போல இருக்கிறார் என்ற புலம்பலும் பல வருடமாகவே இருக்கிறது. தன் சாதனைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி நிறைய சர்ச்சைகளும் உள்ளன.

மொத்தத்தி்ல இருவரும் இரு துருவங்கள் போன்ற வீரர்களாக இருந்தாலும் கூட விளையாட்டைப் பொறுத்தவரை சச்சினுக்கு நிகரானவர்தான் பான்டிங் என்பதில் சந்தேகம் இல்லை, அவர் ஒரு இனவெறியராக அறியப்பட்டாலும் கூட.

Story first published: Thursday, November 29, 2012, 13:10 [IST]
Other articles published on Nov 29, 2012
English summary
Here is a fine rounup on cricket legends Sachin and Ponting.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+