For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினின் அபார சதத்தால் இந்தியா அபார வெற்றி

By Staff
Sachin Tendulkar
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கர் தனது 43வது சதத்தைப் பதிவு செய்தார். தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் இன்று போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. மழை இருக்காது என்று முன்பே கூறி விட்டபடியாலும், இந்த மைதானம் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்ப உதவும் என்பதாலும் ரசிகர்கள் பெரும் ரன் விருந்தை ருசிக்க ஆவலுடன் இருந்தனர்.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து கேப்டன் வெட்டோரிக்கு முதல் குழந்தை பிறந்திருப்பதால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக பிரன்டன் மெக்கலம் கேப்டனாக செயல்பட்டார்.

சச்சின் 43வது சதம்...

இந்திய அணியின் துவக்க வீரர்களாக சச்சின், ஷேவாக் இறங்கினர். மழையால் கைவிடப்பட்ட 2வது போட்டியில் அபாரமாக ஆடி அரை சதம் போட்டிருந்த இவர்கள் இருவரும் இந்த முறை சதம் போட்டு அசத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால், நியூசிலாந்து பவுலர்களை தொடர்ந்து மிரட்டி வந்த ஷேவாக் இம்முறை வெறும் 3 ரன்களுக்கு அவுட்டாகி, ஏமாற்றம் அளித்தார்.

அதேசமயம், ஷேவாக் போனாலும் சற்றும் அயராமல் சச்சின் தனது விளாசலை வெளிப்படுத்தினார்.

தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்திய சச்சின், நியூசிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 58வது பந்தில் அரைசதம் கடந்தார். அதேசமயம், மறு முனையி்ல் படு நிதானமாக ஆடி 27 பந்துகளைச் சாப்பிட்டு 15 ரன்களை மட்டுமே டெலிவரி செய்திருந்த கம்பீர் அவுட்டானார்.

பின்னர் வந்தார் யுவராஜ். ஆட்டம் சூடு பிடித்தது. யுவராஜ் சிக்சரும், பவுண்டரியுமாக வெளுத்து வாங்க, இந்தியாவின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இவர் 6 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 60 பந்தில் 87 ரன்கள் எடுத்து, எலியாட் பந்தில் அவுட்டானார்.

மறுமுனையில் தொடர்ந்து மிரட்டிய சச்சின் ஒரு நாள் வரலாற்றில் 43வது சதத்தைப் பதிவு செய்தார். இத்தனை சதம் போட்டிருந்தாலும் இதுதான் நியூசிலாந்து மண்ணில் அவர் எடுக்கும் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் டோணியும், சச்சினும் இணைந்து ஆடினர். டோணி, சச்சினுக்கு துணை நின்றார். மில்ஸ் பந்தில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து டோணி அரைசதம் கடந்தார்.

சச்சின் 5 சிக்சர், 16 பவுண்டரி உட்பட 133 பந்தில் 163 ரன்களைக் குவித்து விட்டு ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி ஓய்ந்தார். தொடர்ந்து டோணி 58 பந்தில் 68 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரெய்னா 5 சிக்சர் உட்பட 18 பந்தில் 38 ரன்கள், யூசுப் பதான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் எடுத்தது. இது தான் நியூசிலாந்து மண்ணில் நடந்த ஒரு நாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

இன்று மழை இல்லை என்று வானிலை மையம் அறிவித்திருந்ததற்கு மாறாக ரன் மழை விளாசித் தள்ளி விட்டதால் ரசிகர்கள் பெரும் குஷியடைந்தனர்.

ரைடர் விளாசல்...

இந்நிலையில் கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு ரைடர், கேப்டன் மெக்கலம் சூப்பர் துவக்கம் தந்தனர். இந்திய வேகப் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி விரைவாக ரன்கள் சேர்த்தது.

முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 166 ரன்கள் எடுத்தநிலையில் மெக்கலம் (71), ரெய்னாவின் துல்லிய த்ரோவில் வெளியேறினார்.

தொடர்ந்து அசத்தலாக பேட் செய்த ரைடர் சதம் கடந்தார். இவர் 80 பந்தில் 105 ரன்கள் எடுத்தநிலையில் ஹர்பஜன் பந்தில் அவுட்டான பின்னர்தான், இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி பிறந்தது.

அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஆனால், கடைசிக் கட்டத்தில் களமிறங்கிய மில்ஸ், சவுத்தி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து போட்டியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.

முக்கியமான கட்டத்தை நோக்கி போட்டி போய்க் கொண்டிருந்த நிலையில் மில்ஸ் 55 ரன்களுக்கு அவுட்டாகி இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்தார்.

இதையடுத்து நியூசிலாந்து 45.1 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இவை இரண்டிலும் வென்றால்தான் நியூசிலாந்து தொடரை சமன் செய்யவாவது முடியும். அதேசமயம், நமக்கு ஒரே ஒரு வெற்றி கிடைத்தால் கூட போதும்.

இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி வரும் 11ம் தேதி ஹேமில்டனில் நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:24 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+