Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

அடிலைட் அடிலைடில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவை 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இன்று அடிலைட் ஓவல் மைதானத்தில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தியா இன்றைய போட்டியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. முதல் ஓவர் முதலே இந்தியாவின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியா கடுமையாக திணறியது.

குறிப்பாக இர்பான் பதான், இஷாந்த் சர்மா ஆகியோரின் பந்து வீச்சில் அணல் பறந்தது. முனாப் படேலும் தன் பங்குக்கு ஆஸ்திரேலியர்களைத் திணறடித்தார்.

அதிரடி வீரர் கில்கிறைஸ்ட் 15 ரன்களில் இஷாந்த் சர்மாவால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பான்டிங் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டித் தொடரில் ஒரு போட்டியில் கூட பான்டிங் சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே மாத்யூ ஹைடன் 13 ரன்களில் வீழ்ந்தார்.

இப்படி முன்னணி வீரர்கள் சடசடவென ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. மறு முனையில் இளம் வீரர் மைக்கேல் கிளார்க் மட்டும் தாக்குப் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்.

சைமண்ட்ஸ் 3, ஹூசே 5, ஹோப்ஸ் 19 என பின்னால் வந்த வீரர்களும் மளமளவென ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 150 ரன்களைத் தொடுமா என்ற அளவுக்கு நிலைமை மோசமானது.

ஆனால் கிளார்க்கின் பொறுமையான ஆட்டம், அவருக்குத் துணையாக ஹாக் ஆடிய நிதான ஆட்டம் ஆகியவை ஆஸ்திரேலியாவின் மானத்தைக் காத்து 200 ரன்களைத் தாண்ட உதவியது.

60 ஓவர்கள் இறுதியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் இர்பான் பதான் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், முனாப் படேல், ஹர்பஜன் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சச்சின் 5

பின்னர் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. குறைந்தபட்ச வெற்றி இலக்கு என்பதால் இந்தியாவின் முன்னணி வீரர்களே சிறப்பாக ஆடிய வெற்றியைக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.

ஆனால் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றியது. 15 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 5வது ஓவரில் சச்சின் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 20.

இதையடுத்து களம் இறக்கப்பட்ட பதான் வேகமாக அடித்து ஆட ஆரம்பித்தார். இதனால் ரசிகர்களுக்கு உற்சாகம் பிறந்தது. ஆனால் 14 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஹோப்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார் பதான்.

மறு முனையில் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். சிறிது சிறிதாக அவர் ரன் சேர்த்துக் கொண்டிருந்த நிலையில் எதிர் முனையில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக ஆடி வந்த கம்பீர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த யுவராஜ் சிங், கேப்டன் டோணி இணைந்து சற்றே சமாளித்து ரன்களைச் சேர்த்து ஆட ஆரம்பித்தனர். இருவரும் நிதானமாக ஆடி அதேசமயத்தில் சரியான பந்துகளை அடித்து ரன் சேர்ப்பதில் குறியாக இருந்தனர்.

சிறப்பாக ஆடி இந்தியாவின் ஸ்கோரை வேகமாக உயர்த்திய இந்த ஜோடி, பிராட் ஹாக் ஓவரில் பிரிந்தது. ஹாக் போட்ட பந்தை தூக்கி அடித்த யுவராஜ் சிங், கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். யுவராஜ் எடுத்த ரன்கள் 26.

பின்னர் டோணியும், உத்தப்பாவும் இணைந்து ஆடினர். ஆனால் இந்த ஜோடியால் அஏதிக அளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு இந்திய வீரர்களை பெரிதும் சிரமப்படுத்தியது.

டோணி ஓரளவு ரன் சேர்த்து வந்த நிலையில், 37 ரன்கள் எடுத்திருந்தபோது ஹைடனால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இறங்கிய ஹர்பஜன் சிங்கும் 4 ரன்களில் வெளியேற, உத்தப்பாவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

ஆனால் உத்தப்பாவும் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவை தோல்வி வெகு அருகே நெருங்கியது.

இறுதியில் 41.2 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 153 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு போனஸ் புள்ளிகளும் கிடைத்தன.

முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியா தனது முன்னிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+