மும்பை: காயம் முழுமையாக குணமடையாத நிலையில் அடுத்த மாதம் இலங்கையில் நடக்கவிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஷேவாக் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சீசன் 2 தொடரின் போது இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க சென்ற அவர் பாதியில் நாடு திரும்பினார்.
இதை தொடர்ந்து அவருக்கு தோள்பட்டையில் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை.
தற்போது ஓரளவு தேறி வரும் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசியொதெரபிஸ்ட் பயிற்சியாளர் பால் சாப்மேனின் ஆலோசனையில் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந் நிலையில் அடுத்த மாதம் 8ம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அடுத்த மாதம் 22ம் தேதி தென் ஆப்ரிக்காவில் துவங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடுவாரா என்பது சந்தேகம் என கூறப்படுகிறது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.