Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

309 ரன்கள் குவித்த ஷேவாக்- இந்தியா 468/1

Sehwag
சென்னை: சென்னை கிரிக்கெட் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் வீரேந்திர ஷேவாக் அபாரமாக ஆடி மூன்று சதம் அடித்தார். அவர் மூன்று சதம் அடிப்பது இது 2வது முறையாகும்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 540 ரன்களைக் குவித்தது. முற்றிலும் பேட்டிங்குக்கு சாதகமாக பிட்ச் இருப்பதால் தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்களை அவுட் செய்வதற்குள் இந்திய பந்து வீச்சாளர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

தென் ஆப்பிரிக்க அணியின் ஹாஷிம் அம்லா சதம் அடித்தார்.

இதையடுத்து நேற்று தனது முதல் இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், வாசிம் ஜாபரும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் இருவரும் அடித்து ஆடினர். குறிப்பாக ஷேவாக் ஆட்டத்தில் பொறி பறந்தது. நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் ஷேவாக். ஜாபர் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றும் ஷேவாக் ஆட்டத்தில் வேகம் குறையவில்லை. நேற்று போலவே இன்றும் அடித்து ஆடினார். சந்தித்த பந்துகளை விட எடுத்த ரன்களே அதிகமாக இருந்தது.

இன்று காலை முதலில் முதல் சதத்தைப் போட்டார் ஷேவாக். பிற்பகலில் இரட்டை சதத்தை எட்டினார்.

இன்று மாலையில் ஆட்ட நேரம் முடிய சில நிமிடங்களுக்கு முன்பு தனது 300 ரன்களை கடந்து ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க விட்டார் ஷேவாக்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நங்கூரம் போல நின்று நச் நச் என்று ஷேவாக் அடித்த அடியில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்குப் பொறி கலங்கிப் போயிருக்கும்.

இது ஷேவாக்குக்கு 3வது மூன்றாவது சதமாகும். இதற்கு முன்பு 2004ம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தான் நகரில் அவர் 300 ரன்கள் எடுத்தார்.

உலக அளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட முச்சதங்களை எடுத்தவர்கள் வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார் ஷேவாக். இதற்கு முன்பு டான் பிராட்மேன் மற்றும் பிரையன் லாரா ஆகியோர் இந்த சாதனைகளை வைத்துள்ளனர்.

இன்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் எடுத்துள்ளது.

ஷேவாக் 309 ரன்களுடனும், ராகுல் டிராவிட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஷேவாக் 292 பந்துகளில் 309 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 42 பவுன்டரிகளும், 5 சிக்சர்களும் அடக்கம்.

ரசிகர்கள் மீது தடியடி:

இதற்கிடையே, போட்டியைக் காண இன்று பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். ஆனால் ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் இன்று யாருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.

இதையடுத்து ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+