அக்தருக்கு 5 ஆண்டுகள் தடை-பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சர்ச்சையில் சிக்குவது சகஜம்.
2006ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டு தடைக்குள்ளானார். கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது சக வீரர் முகமது ஆசிப்பை பேட்டால் தாக்கினார். இதில் அக்தருக்கு 13 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
மேலும் அக்தரின் நடத்தை கண்காணிக்கப்படும் என்றும், நடத்தை விதிகளை மீண்டும் மீறினால் ஆயுள் தடை விதிக்கப்படும் என்றும் அந் நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.
இந் நிலையில் உடல் தகுதி இல்லை என்று கூறி அணியில் அக்தருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அவர் விமர்சிக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து அவரை அழைத்து விசாரித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதில் ஆஜராகி அக்தர் தனது விளக்கத்தை அளித்தார்.
ஆனாலும் அந்த விளக்கங்கள் ஏற்கப்படவில்லை. அவர் தொடர்ந்து பிரச்சினை கிளப்புவதால் 5 ஆண்டுகள் போட்டிகளில் விளையாட தடை விதித்தது வாரியம்.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணிக்காகவோ அல்லது பாகிஸ்தானில் எந்த ஒரு இடத்திலேயோ அக்தர் விளையாட முடியாது.
அதே நேரத்தில் அவர் இந்திய பிரிமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) விளையாட தடையேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் வாங்கியுள்ள கொல்கத்தா அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.
அதே நேரத்தில் உள் நாட்டில் அக்தருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
32 வயதான அக்தர் 1997ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 46 டெஸ்ட்டுகளிலும் 138 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கோர்ட்டுக்கு போவேன்-அக்தர்:
இந் நிலையில் அக்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தான் நாட்டுக்காகவும், அணிக்காகவும் எனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளேன். இந்த தடையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த தண்டனை மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது.
இது கடுமையான, நேர்மையற்ற முடிவு. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டும் கூட இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளனர். இது என் கிரிக்கெட் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்து விடும்.
நான் இன்னும் எனது நாட்டு அணிக்காக விளையாட விரும்புகிறேன். தண்டனையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
தப்பிய கனேரியா:
அதே போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து வரும் அந் நாட்டு சுழற்பந்து வீச்சாளர் கனேரியா மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.
ஆனாலும் அவரை எச்சரிக்கையோடு விட்டுவிட்டது வாரியம்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications