ஆளாளுக்கு சதம்.. எடுபடாத பந்து வீச்சு - இப்படியும் ஒரு மேட்ச், இதுக்குப் பேரும் பிட்ச்!
காலே: தெற்காசியாவில் விளையாடுவதை பெரும்பாலான வெளிநாட்டு அணிகள் விரும்புவதே இல்லை. காரணம் இங்கு அமைக்கப்படும் உருப்படாத பிட்ச்கள்தான். இப்படிப்பட்ட ஒரு 'செத்த' பிட்ச்சில் ஒரு போட்டி நடந்துள்ளது. அதில் விளையாடிய இலங்கையும், வங்கதேசமும் ஆளாளுக்கு சரமாரியாக ஆடி ரன்களைக் குவித்து பந்து வீச்சையே கேலிக்கூத்தாக்கியுள்ளன.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு விளையாட வருவது என்றாலே ஒரு வகையான வெறுப்புடன்தான் வருவார்கள். அதில் இன ரீதியான வெறுப்பும் கலந்திருக்கும் என்றாலும் கூட, பிட்ச்களை நினைத்துப் பயந்து கொண்டும் அவர்கள் வரத் தயங்குவார்கள். காரணம், இங்கு அமைக்கப்படும் பிட்ச்களின் தன்மை அப்படி.
பேட்டிங்குக்கு சாதகமாக மட்டுமே இந்திய, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பிட்ச்கள் பொதுவாக அமைக்கப்படும். பந்து வீச்சுக்கு சாதகம் என்றால் அது பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாகவே இருக்கும்.

கேலிக்கூத்து டெஸ்ட்
இந்த நிலையில் இலங்கையின் காலேவில் நடந்த இலங்கை, வங்கதேசத்திற்கு இடையிலான டெஸ்ட் போட்டி பெரும் கேலிக்கூத்தாக மாறி முடிந்துள்ளது. அதாவது இந்தப் போட்டியில் பந்து வீச்சை விட பேட்டிங்தான் மிகப் பெரிய அளவில் எடுபட்டது. இரு அணியினரும் சரமாரியாக மாறி மாறி ரன்களைக் குவித்தனர். விளைவு - போட்டி டிராவில் முடிந்து விட்டது.

இலங்கை போட்ட முதல் 3 சதம்
இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டிதான் காலேவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் இலங்கை ஆடியது. இதில் 4 விக்கெட் இழப்புக்கு 570 ரன்களை அது குவித்தது. இதில் திரிமன்னே, சங்கக்கரா, சண்டிமால் ஆகியோர் தலா ஒரு சதம் போட்டனர்.

மண்ணைப் போட்ட வங்கதேசம்
சரி பந்து வீச்சில் வங்கதேசத்தை சுருட்டி விடலாம் என்று எண்ணித்தான் இலங்கை தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆனால் அதில் வங்கதேசம் மண்ணைப் போட்டு விட்டது.

முஷ்பிகுர் ரஹ்மானின் இரட்டைச் சதம்
வந்த பந்தையெல்லாம் அடித்து விரட்டிய வங்கதேச ஆட்டக்காரர்கள், இலங்கை பந்து வீச்சாளர்களை நையப்புடைத்து விட்டனர். அனைத்து விக்கெட்களையும் இழந்து 638 ரன்களைக் குவித்து விட்டுத்தான் ஓய்ந்தனர். இதில், வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் இரட்டை சதம் போட்டார். இவர்தான் அணியின் கேப்டனாவார்.

அஷ்ரபுல் குவித்த 190 ரன்கள்
அதேபோல முகமது அஷ்ரபுல் 190 ரன்களையும், நசீர் உசேன் 100 ரன்களையும் எடுத்தனர்.

மறுபடியும் சதம் போட்ட இலங்கை
அடுத்து இலங்கை தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. மறுபடியும் ரன் குவித்தது. 4 விக்கெட் இழப்புக்கு 335 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. சங்கக்கரா மறுபடியும் சதம் போட்டார். அதேபோல தில்ஷானும் சதம் போட்டார்.

அம்புட்டுதான்.. போட்டி டிரா
வங்கதேசம் வெற்றி பெற 268 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை வங்கதேசம் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்த டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இரு தரப்பிலும் மொத்தமாக 8 சதங்கள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த டெஸ்ட் போட்டி 16ம் தேதி கொழும்பில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications