இங்கிலாந்து 316 - இந்தியா தடுமாற்றம் - 6-155

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. ஆன்ட்ரூ ஸ்டிராஸ் சிறப்பாக ஆடி சதம் போட்டார்.
இங்கிலாந்து வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இன்று காலை ஆட்டம் தொடங்கியதும், மீண்டும் நிதான கதியில் இங்கிலாந்து வீரர்கள் ஆடத் தொடங்கினர்.
இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங்கும், அமீத் மிஸ்ராவும் சேர்ந்து, இங்கிலாந்து அணியின் ரன் வேகத்தை கட்டுபடுத்தியதோடு, முக்கிய விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பிளின்டாப் 18 ரன்களுடனும், ஆன்டர்சன் 19 ரன்களுடனும் பேக்கப் ஆகினர். விக்கெட் கீப்பர் பிரியர் மட்டும் சற்று தாக்குப் பிடித்து ஆடினார். சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் வந்தவர்கள் சொல்லிக் கொள்ளும்படி ஆடாததால், இங்கிலாந்து அணி 316 ரன்களுக்கு சுருண்டது.
ஹர்பஜன் சிங், அமீத் மிஸ்ரா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து இந்தியா ஆடத் தொடங்கியது. வேகமாக ஆடி ரன்களைக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முற்றிலும் நேர் மாறாக, இந்திய முன்னணி வீரர்கள் படு வேகமாக பெவிலியனுக்குத் திரும்பத் தொடங்கினர்.
கம்பீர் 19, ஷேவாக் 9, டிராவிட் 3 என ஆட்டமிழந்தனர். சச்சின் டெண்டுல்கர் மட்டும் சற்று தாக்குப் பிடித்து 37 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வி.வி.எஸ். லட்சுமணும் ஏமாற்றமளித்தார். அவரது பங்கு 24 ரன்கள்.
ஏமாற்றினார் யுவராஜ் சிங்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கு வந்துள்ள யுவராஜ் சிங், கங்குலியின் இடத்தை நிரப்பப் போகிறார் என்று கூறப்பட்ட யுவராஜ் சிங் இன்று பெரும் ஏமாற்றத்தைத் தந்தார்.
41 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 14 ரன்களை மட்டும் எடுத்து விட்டு ஹார்மிசன் பந்தில் வீழ்ந்தார்.
ஆட்ட நேர இறுதியில், இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களுடன் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது. டோணி 24 ரன்களும், ஹர்பஜன் சிங் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்வான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஹார்மிசன், ஆண்டர்சன், பிளின்டாப், பனீசர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications