பாக். செல்கிறது இலங்கை கிரிக்கெட் அணி
கொழும்பு: இந்தியாவுக்குப் பதில், பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே அனுமதி அளித்துள்ளார்.
மும்பை தாக்குல் சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பாகிஸ்தானில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடவிருந்ததை இந்திய கிரிக்கெட் அணி, அரசின் உத்தரவை ஏற்று ரத்து செய்து விட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு இலங்கை அணிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது.
இதை ரணதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றது. ஆனால் திடீர் நடவடிக்கையாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்து விட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி போகுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவையே இலங்கை கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் என இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இதனால் இலங்கை அணி, பாகிஸ்தான் போகாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பாகிஸ்தானுக்கு செல்லலாம் என இலங்கை கிரிக்கெட் அணிக்கு அதிபர் ராஜபக்சே அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவுடன் ஆலோசனை நடத்தினார். இதன் இறுதியில், இலங்கை அணியை பாகிஸ்தான் செல்ல அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ஜனவரி 20ம் தேதி முதல் பிப்ரவரி 25ம் தேதி வரை இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications