கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவராகிறார் ஸ்ரீகாந்த்?

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக தற்போது திலீப் வெங்சர்க்கார் உள்ளார். அவரது பணி முடிவடையவுள்ளது. இதையடுத்து தேர்வுக் குழுத் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற வேட்டையை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
பல முன்னாள் வீரர்கள் இப்பணிக்காக தவம் இருந்து வருகின்றனர். இருப்பினும் அவர்களில் யாரை கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
பல முன்னாள் வீரர்கள் டிவி அசைன்மென்ட்டுகளில் பிசியாக உள்ளனர். இது ஆண்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், தேர்வுக் குழுத் தலைவர் பதவிக்கு தரும் ரூ. 25 லட்சத்தை விட மதிப்பு வாய்ந்த, பணம் கொழிக்கும் பணியாகும். இதனால் அப்படிப்பட்டவர்களை விட்டு விட்டு கிரிக்கெட்டை நேசிக்கும் முன்னாள் வீரர்களை தேர்வுக் குழுத் தலைவராக்க வாரியம் திட்டமிட்டு வருகிறது.
தேர்வுக் குழுத் தலைவர் பதவிக்கென சில தகுதிகளை கிரிக்கெட் வாரியம் வைத்துள்ளது. அதன்படி நியமிக்கப்படும் வேட்பாளர் 10 ஆண்டுகளுக்கு முன்பே போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். எந்த கிரிக்கெட் சங்கத்திலும் பதவி வகிக்கக் கூடாது என்பது அவற்றில் முக்கியமான தகுதிகள்.
தற்போதைய நிலையில், முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ெதரிகிறது. தமிழ்நாட்டைச் ேசர்ந்த ஸ்ரீகாந்த், கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 'பின்ச் ஹிட்டிங்' என்ற அதிரடி முறையை (இப்போதைய இளம் வீரர்கள் அனைவரும் இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்) அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீகாந்த்தான். வந்தோமா, விளாசினோமோ என்று அதிரடியாக ஆடியவர் ஸ்ரீகாந்த்.
1983ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது, இந்திய அணியிலேயே அதிகபட்ச ஸ்கோரை எடுத்ததும் ஸ்ரீகாந்த்தான். தற்போது ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
தேர்வுக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு கிழக்கு மண்டலத்தில் கோபால் போஸ், ராஜா வெங்கட், சம்பரன் பானர்ஜி ஆகியோரின் பெயர்களும், மத்திய மண்டலத்தில் நரேந்திர ஹிர்வானி பெயரும், வடக்கு மண்டலத்தில் யஷ்பால் சர்மா பெயரும், மேற்கு மண்டலத்தில் லால்சந்த் ராஜ்புத், யஜுவிருந்தா சிங் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications