வரும் 29ம் தேதி வரை டால்மியாவே தலைவராக இருக்கட்டும்: பிசிசிஐ கூட்டத்தில் முடிவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடந்தது. இதில் வாரியத்தின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா, தற்காலிகமாக பதவியை இழந்து நிற்கும் என்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கினார். இதையடுத்து தான் சீனிவாசன் பதவி விலக வேண்டியதானது.
ஆனால் தற்போது மெய்யப்பன் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைவர் பதவிக்கு மீண்டும் வர முயற்சி செய்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி நடக்கவிருந்த கூட்டத்திலேயே அவர் தலைவர் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கூட்டம் திடீர் என்று ரத்தானது.
இந்நிலையில் இன்று செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் தலைவர் பதவியை மீண்டும் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரும் 29ம் தேதி வாரியத்தின் வருடாந்திர கூட்டம் நடக்கும் வரை இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியாவே தலைவராக இருக்கட்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications