கிரிக்கெட் அணிகள்-ரூ.3000 கோடிக்கு ஏலம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 12 அணிகளில் எட்டு அணிகள் ரூ. 3,000 கோடிக்கு ஏலம் போயுள்ளன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், தொழிலதிபர் விஜய் மல்லையா, நடிகை ப்ரீத்தி ஜிந்தா, முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் பெரும் விலை கொடுத்து இந்த அணிகளை வாங்கியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு போட்டியாக ஜீ டிவி அதிபர் சுபாஷ் சந்திரா கபில்தேவை தலைவராகக் கொண்டு இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் தினேஷ் மோங்கியா உள்ளிட்ட இந்திய வீரர்களும் மேலும் பல நாடுகளின் முன்னணி வீரர்களும் இணைந்துள்ளனர்.
இதையடுத்து ஐசிஎல்க்குப் போட்டியாக இந்தியன் பிரிமீயர் லீக் என்ற அமைப்பை பிசிசிஐ உருவாக்கியது. இந்த அமைப்பில் இந்திய நட்சத்திர வீரர்கள் தவிர ஏராளமான வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் சார்பாக மொத்தம் 12 கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு அணிகளுக்கான ஸ்பான்சர்களைப் பிடிக்க நேற்று ஏலம் நடந்தது. மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் இந்த ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில் எட்டு அணிகளும் கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அளவுக்கு ஏலம் போயின.
அதிகபட்சமாக மும்பை அணியை தொழிலதிபர் முகேஷ் அம்பானி 111.9 மில்லியன் டாலருக்கு (ரூ. 439 கோடி) ஏலத்தில் எடுத்தார். மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் விஜய் மல்லையாதான் மும்பை அணியை ஏலம் எடுக்க அதிக தொகைக்கு கேட்டார். ஆனால் அவரை விட கூடுதல் தொகை கொடுத்து அம்பானி அணியைத் தட்டிச் சென்றார்.
இருப்பினும் பெங்களூர் அணியை தொழிலதிபர் விஜய் மல்லையா 111.6 மில்லியன் டாலருக்கு (ரூ. 438 கோடி) ஏலம் எடுத்தார்.
ஹைதராபாத் அணியை டெக்கான் குரானிக்கிள் பத்திரிக்கை நிர்வாகம் 107.01 மில்லியன் டாலருக்கு (ரூ. 420 கோடி) ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை அணி 91 மில்லியன் டாலருக்கு (ரூ. 357 கோடி) ஏலம் போனது. இந்தியா சிமென்ட்ஸ் அதிபர் சீனிவாசன் இதை ஏலம் எடுத்துள்ளார்.
டெல்லி அணியை ஜிஎம்ஆர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 84 மில்லியன் டாலருக்கு (ரூ. 330 கோடி) எடுத்துள்ளது.
சண்டிகர் அணியை நடிகை ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அவரது காதலர் நெஸ் வாடியா இணைந்து 76 மில்லியன் டாலருக்கு (ரூ. 298 கோடி) ஏலம் எடுத்தனர். ஷாருக்கை விட கூடுதல் தொகை கொடுத்து சண்டிகரை தட்டிச் சென்றார் ப்ரீத்தி ஜிந்தா.
ஷாருக் கான், கொல்கத்தா அணியை 75 மில்லியன் டாலருக்கு (ரூ. 294) ஏலத்தில் எடுத்துள்ளார். ஷாருக்கானுடன், ஜூஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோர் கூட்டாக இந்த ஏலத்தை எடுத்தனர்.
ஜெய்ப்பூர் அணியை எமர்ஜிங் இந்தியா நிறுவனம் 67 மில்லியன் டாலருக்கு (ரூ. 263 கோடி) ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏலத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை கிரிக்கெட் வாரிய துணைத் தலைவரும், ஐபிஎல் அமைப்பின் தலைவருமான லலித் மோடி செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள மிகத் தாமதமாக விண்ணப்பித்ததற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் அடாக் நிறுவனம், ஐசிஐசிஐ, சஹாரா, ப்யூச்சர்ஸ் குரூப் ஆகியவை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மோடி அறிவித்தார்.
ஒளிபரப்பு உரிமை ரூ. 4,000 கோடி
இந்த அணிகள் பங்கேற்கும் போட்டிகளை பத்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் டிவி உரிமையை சோனி டிவி நெட்வொர்க் மற்றும் சிங்கப்பூரின் வேர்ல்ட்ஸ் போர்ட்ஸ் நிறுவனங்கள் கூட்டாக பெற்றுள்ளன. இந்த உரிமை ரூ. 4,000 கோடிக்கு விலை போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அணிகள் ஏலம் மற்றும் ஒளிபரப்பு உரிமை ஆகியவை மூலம் மொத்தமாக ரூ. 7,000 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அள்ளியுள்ளது.
கங்குலி கேப்டனாக ஷாருக் விருப்பம்
கொல்கத்தா அணியை ஏலத்தில் எடுத்துள்ள ஷாருக் கானும், ஜூஹி சாவ்லாவும், தங்களது அணியின் கேப்டனாக கங்குலி செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஷாருக் கூறுகையில், வெற்றிகரமான அணியை உருவாக்க ஆசையாக உள்ளேன். இதுகுறித்து கிரிக்கெட் நிபுணர்களுடனும், வல்லுனர்களுடனும் ஆலோசிக்கவுள்ளேன்.
அணி எப்படி அமைய வேண்டும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் சூப்பரான ஒரு அணியாக கொல்கத்தா அணி இருக்கும். அதில் சந்தேகம் வேண்டாம். தாதா (கங்குலியின் செல்லப் பெயர்) கேப்டனாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
எனது அணியை அவர்தான் தலைமை தாங்கிச் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளேன். அவர்தான் கேப்டன் பதவிக்கு சரியான ஆள். இளம் வீரர்களுக்கு அணியில் முக்கியத்துவம் தரப்படும். அவர்களை ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளேன். பணம் பெரிதல்ல.
கிரிக்கெட் மீது எனக்கு பெரிய அளவில் காதல் உண்டு. அதன் ஒவ்வொரு அம்சத்திலும் இடம் பெற வேண்டும் என விரும்புகிறேன். இன்னொரு விஷயத்தையும் சொல்லிக் கொள்கிறேன். அணியை சிறப்பாக வழி நடத்திச் செல்ல நிறையப் பணம் வேண்டும். அதற்காக நிறையப் படங்களில் நடிக்க வேண்டிய நிலையிலும் உள்ளேன். அப்போதுதானே பணம் சேர்க்க முடியும் என்றார் தனக்ேக உரிய ஜாலி பாணியில்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications