மெல்போர்ன்: அணி நிர்வாகக் கூட்டத்திற்கு வராமல் மீன் பிடிக்கப் போனதற்காக தடை செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக திகழ்பவர் சைமண்ட்ஸ். சில மாதங்களுக்கு முன்பு நடந்த அணி நிர்வாகக் கூட்டத்திற்கு அவர் வரவில்லை. மாறாக மீன் பிடித்துப் பொழுது போக்கப் போய் விட்டார்.
இதனால் கடுப்பான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சைமசண்ட்ஸை சஸ்பெண்ட் செய்தது. அவருக்கு மன நல மறுவாழ்வு பயிற்சிகளை அளிக்கவும் உத்தரவிட்டது.
இதனால், சைமண்ட்ஸ் இல்லாமலேயே இந்தியா வந்தது ஆஸ்திரேலிய அணி. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை இந்திய அணிக்குத் தந்து விட்டு தோல்விமுகத்துடன் நாடு திரும்பியது.
இந்த நிலையில் சைமண்ட்ஸ் மீதான தடையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நீக்கி விட்டது. அவர் சரியாகி விட்டார் என கிரிக்கெட் வாரியத் தலைவர் சுதர்லாந்த் கூறியுள்ளார்.
இதையடுத்து டுவென்டி 20 அணியில் சைமண்ட்ஸ் சேர்க்கப்பட்டார். தற்போது டெஸ்ட் அணியிலும் அவருக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
மெல்போர்ன் நகரில் அடுத்த வாரம் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் சைமண்ட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், இந்திய தொடரில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் காமரூன் ஒயிட் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டுள்ளார்.