சிட்னி: எந்த சிட்னி மைதானத்தில் ஹர்பஜன் சிங்குடன் வம்புச் சண்டையில் ஈடுபட்டாரோ, அதே சிட்னி மைதானத்தில் நேற்று இஷாந்த் சர்மாவிடம் வம்பிழுத்து சண்டையில் இறங்கினார் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்.
சிட்னி மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது ஹர்பஜன் சிங்கிடம் சண்டையில் ஈடுபட்டார் சைமண்ட்ஸ். இது பின்னர் இனவெறி சர்ச்சையாக உருவெடுத்தது. ஆனால் சைமண்ட்ஸ்தான் முதலில் சண்டையைத் தொடங்கினார். அதற்கு ஹர்பஜன் சிங் பதிலளித்தார். அவர் இந்தியில் உள்ள ஒரு கெட்ட வார்த்தையை உபயோகித்தார். அது மங்கி என்ற அர்த்தத்தில் சைமண்ட்ஸுக்குக் கேட்டதால் இனவெறி புகார் எழுந்து விட்டதாக ஐசிசியின் அப்பீல் கமிட்டி விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வம்புச் சண்டையில் இறங்கினார் சைமண்ட்ஸ்.
நேற்று சிட்னியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியமான ஒரு நாள் போட்டியில் மோதின. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. பின்னர் இந்தியா விளையாடியது. வெற்றி இலக்குக்கு வெகு அருகில் வந்த இந்தியா, துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவியது.
சைமண்ட்ஸ் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் அரை சதம் போட்டார். மொத்தமாக 59 ரன்கள் எடுத்தார். அவரது இறுதி ஓவர்களில் ஐந்து பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசினார்.
சைமண்ட்ஸின் அதிரடி ஆட்டத்தை இஷாந்த் சர்மாவின் பந்து தடுத்து நிறுத்தி, கிளீன் பவுல்ட் ஆக்கி அவுட் செய்தது. இதனால் கடுப்பாகி விட்டார் சைமண்ட்ஸ். உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறாமல், இஷாந்த் சர்மாவைப் பார்த்து ஏதோ கூறி கோபத்துடன் சண்டை போட ஆரம்பித்தார்.
பதிலுக்கு இஷாந்த் சர்மாவும், அவுட் ஆகி விட்டீர்கள், மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்பது போல சைமண்ட்ஸை நோக்கி சைகை காட்டினார்.
பிரச்சினை எழப் போவதை உணர்ந்த இரு நடுவர்களும் விரைந்து வந்து இந்திய வீரர்களை அமைதி காக்குமாறு கூறினர். பின்னர் நடுவர் டேரைல் ஹார்பர், கேப்டன் டோணியிடம் பேசி வீரர்களை சமாதானப்படுத்துமாறு அறிவுரை கூறினார்.
அதன் பின்னர் இந்திய வீரர்கள் பிரச்சினையை விட்டு விட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தினர்.
ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வீரர் இஷாந்த் சர்மா மீது மட்டும் போட்டி நடுவர் நடவடிக்கை எடுத்தார். அவருக்கு போட்டிக்கான பணத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.