பிரச்சனையை தொடங்கியது சைமண்ட்ஸ்தான்: ஹன்சன்

அடிலைட்: சைமண்ட்ஸ்-ஹர்பஜன் சிங் விவகாரத்திற்கு முக்கிய காரணம், சைமண்ட்ஸ் முதலில் ஹர்பஜனை அவதூறான வார்த்தைகளால் திட்டியதுதான் என்று ஐசிசி மேல் முறையீட்டு ஆணையர் நீதிபதி ஜான் ஹன்சன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் மீதான இனவெறி புகார் மீதான அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி ஹன்சன், ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு விதிக்கப்பட்ட 3 டெஸ்ட் தடை நீங்கியது.
இந்த நிலையில் ஹன்சன் தனது 22 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:
ஜனவரி 4ம் தேதி, சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின், 116வது ஓவரின்போதுதான் பிரச்சினை ஏற்பட்டது. பந்து வீச்சாளர் பிரெட் லீயின் பந்தை அடித்து விட்டு ஓடிய ஹர்பஜன் சிங், அவர் மீது லேசாக மோதி விட்டார். இதையடுத்து லீயின் முதுகில் லேசாக தட்டினார் ஹர்பஜன் சிங்.
இது வேண்டுமென்றே நடந்ததல்ல. நன்றாக பந்து வீசினீர்கள் என்று லீயை பாராட்டவே செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.
அந்த சமயத்தில் சைமண்ட்ஸ், ஹர்பஜன் சிங்கிடம் சென்று ஆஸ்திரேலியர்கள் யாரும் உனக்கு நண்பர்கள் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் அவதூறான நான்கு எழுத்து வார்த்தையை அவர் ஹர்பஜனை நோக்கி பிரயோகித்தார். இதனால் கோபமடைந்த ஹர்பஜன் சிங் சூடான பதிலளித்தார். அவர் என்ன சொன்னார் என்பதுதான் பிரச்சினையாகி விட்டது என்று கூறியுள்ளார் ஹன்சன்.
இதற்கிடையே, சைமண்ட்ஸ் பேச்சால் கடுப்பான ஹர்பஜன் சிங், 'தேரி மா கி'... என்ற இந்தி கெட்ட வார்த்தையை (அம்மாவை குறிப்பிட்டு கெட்ட வார்த்தை) உபயோகித்துள்ளார். இது சைமண்ட்ஸ் காதில் மங்கி என்று கேட்டுள்ளது. அவருக்கு இந்தி தெரியாது என்பதால் மாகி என்பது மங்கி என்று கேட்டு விட்டது.
ஹன்சன் நடத்திய விசாரணையின்போது இந்த வார்த்தையை ஹர்பஜன் நீதிபதியிடம் கூறியபோது, உடன் இருந்த சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் மீடியா மேலாளர் மனோகர் ஆகியோர் சிரித்து விட்டனராம்.
பிறகு நீதிபதி ஹன்சன், தேரி மாகி என்பதற்கு அர்த்தம் என்ன என்று சச்சினிடம் கேட்டுள்ளார். சச்சினும் அதன் அர்த்தத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து சச்சினின் விளக்கத்தை முக்கிய சாட்சியாக எடுத்துக் கொண்ட ஹன்சன், இது கெட்ட வார்த்தைதாதன், ஆனால் இனவெறி வார்த்தை அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
மைக்ரோ போன் ஆடியோ பதிவு ஆதாரம்:
இதற்கிடையே, ஹர்பஜன் சிங்குக்கும் -சைமண்ட்சுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இனவெறி சர்ச்சை அப்பீல் விசாரணையின்போது நீதிபதி ஹன்சன் அதுதொடர்பான ஸ்டம்பு மைக்ரோ போன் ஆடியோ பதிவை ஆதாரமாக எடுத்துக் கொண்டார்.
ஹர்பஜன் -சைமண்ட்ஸ் வாக்குவாதத்தின் போது நடுவர் மார்க் பென்சனை ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் மிரட்டியது மைக்ரோ போனில் பதிவாகி இருப்பதாக தனியார் டிவி ஒன்று தகவல் வெளியிட்டு உள்ளது.
ஹர்பஜன் சிங்கிடம் சென்று பேசுமாறு நடுவரை பாண்டிங் கட்டாயப்படுத்தி உள்ளார். ஸ்டம்பு மைக்ரோ போன் பதிவில் சைமண்ட்ஸ், பாண்டிங், ஹைடன், ஹர்பஜன் தெண்டுல்கர் ஆகியோரது குரல்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications