4வது டெஸ்ட்: சச்சின் சதத்தால் இந்தியா முன்னிலை

அடிலைட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சதத்தால் இந்தியா 309 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நடுவர் பக்னரின் உதவியால் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியினர் கடைசி டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்ய முயற்சித்துள்ளனர்.
இன்று துவங்கிய 4 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் அனில் கும்ளே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் பெவிலியன் செல்வதிலேயே குறியாக இருந்தனர். சேவக் மட்டும் நிலைத்து விளையாட பின்னர் பதான், டிராவிட் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
பின்னர் சேவக் சச்சினுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும்போது 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கங்குலிக்கு என்ன கோபமோ தெரியவில்லை. 7 ரன்கள் மட்டும் எடுத்து தன் பணியை முடித்துக் கொண்டார்.
சச்சின் மட்டும் நின்று கொண்டிருக்கு பின்னர் களமிறங்கிய லட்சுமண் அவருடன் ஜோடி சேர்ந்து பிரமாதமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது சச்சின் தனது டெஸ்ட் விளையாட்டில் 39வது சதத்தை அடித்தார்.
சச்சின்-லட்சுமண் இணைந்து 129 ரன்கள் எடுத்தனர். லட்சுமண் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் சச்சினுடன் டோணி சேர்ந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்தது.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 124 ரன்களுடனும், டோணி 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஜான்சன், பிரட் லீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹாக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications