டெஸ்ட்-300 விக்கெட் வீழ்த்தி வெட்டோரி சாதனை
கொழும்பு: டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன் மற்றும் 300 விக்கெட் வீழ்த்திய ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் நியூசிலாந்து கேப்டன் வெட்டோரியும் இணைந்துள்ளார். மேலும், டெஸ்டில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதைனையையும் படைத்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் தற்போது கொழும்பில் நடக்கிறது.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக வந்த பரனவிதானா 19, தில்ஷன் 29 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து வந்த ஜெயவர்தனா, கேப்டன் சங்ககராவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை அதிகரித்தார். சங்ககரா அரைசதம் கடந்த நிலையில் வெட்டோரி சுழலில் வெளியேறினார்.
இது டெஸ்ட் போட்டிகளில் வெட்டோரி கைப்பற்றும் 300வது விக்கெட்டாகும். இதையடுத்து அவர் 3 ஆயிரம் ரன்கள், 300 விக்கெட் எடுத்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் என்ற பெருமை பெற்றார். மேலும், 300 விக்கெட் வீழ்த்திய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.
இலங்கை முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்திருந்தது. ஜெயவர்தனா 79, சமரவீரா 78 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


Click it and Unblock the Notifications