பாக். நிதான ஆட்டம் - கும்ப்ளே அபாரம் - வெல்லுமா இந்தியா?

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற களமிறங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் 22ம் தேதி துவங்கியது. பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3ம் நாள் ஆட்டம் துவங்கியது. நின்று விளையாடி பெரிய ஸ்கோரை இந்தியா எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை ஆட்டத்தைத் தொடங்கிய கும்ப்ளே - வி.வி.எஸ்.லட்சுமண் ஜோடி விரைவிலேயே பிரிந்தது.
கும்ப்ளே 24 ரன்கள் எடுத்த நிலையில் கனேரியா பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். லட்சுமண் மட்டும் ஒரு முனையில் நின்று கொண்டு களமிறங்கி அடுத்தடுத்து அவுட்டாகி சென்ற வீரர்களை விரக்தியுடன் பார்த்து கொண்டிருந்தார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் வெகு வேகமாகவே முடிவுக்கு வந்தது. 78.4 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து இந்தியா ஆட்டமிழந்தது. லட்சுமண் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் அணியின் கனேரியா 4 விக்கெட்டுகளையும், தன்வீர் 3 விக்கெட்டுகளையும், சோயப் அக்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து பாகிஸ்தான் அணி தனது 2வது இன்னிங்சை துவக்கியது. முதல் இன்னிங்சில் சரியாக விளையாடாத சல்மான் பட் மற்றும் யாசிர் ஹமீத் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
ஹமீத் கும்ப்ளே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சல்மான் பட் 67 ரன்கள் எடுத்த நிலையில் கும்ப்ளே பந்துவீச்சில் அவுட்டானார்.
அதன் பின்னர் களமிறங்கிய யூனிஸ் கான், முகம்மது யூசுப் மற்றும் கேப்டன் சோயப் மாலிக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கம்ரான் அக்மலும், முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய மிஸ்பா உல் ஹக்கும் ஜோடி சேர்ந்து கடைசி வரை நின்று விளையாடினர்.
இறுதியில், 3ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்துள்ளது. இந்தியாவை விட 167 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசியதைப் போல 2வது இன்னிங்ஸிலும் கும்ப்ளே சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நாளைய ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குள் பாகிஸ்தானை 250 ரன்களுக்குள் சுருட்டி விட்டால் இந்திய அணி டெஸ்ட்டை வெல்லும் வாய்ப்புள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications