யாருக்கு டுவென்டி-20 கோப்பை? இன்று பாக்.-இலங்கை மோதல்

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கவிருக்கும் பைனலில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
இரண்டு அணிகளும் ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தலா ஒரு முறை உலக கோப்பை வென்றுள்ள போதிலும் இதுவரை டுவென்டி-20 தொடரில் கோப்பை வென்றதில்லை. கடந்த முறை பைனல் வரை முன்னேறிய பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை இந்தியாவிடம் பறிகொடுத்தது.
இம்முறையும் சூப்பராக விளையாடி அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. இம்முறை கோப்பையை கோட்டை விட கூடாது என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது.
இந்த தொடரில் இவ்விரு அணிகளும் மோதி கொள்வது இது இரண்டாவது முறை. முன்னதாக சூப்பர்-8 போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் இலங்கை 19 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.
இந்த நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை அணி, இதுவரை இத்தொடரில் வீழ்த்த முடியாத அணியாக பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பேட்டிங்கில் இலங்கையின் தில்ஷன் 6 போட்டியில் மூன்று அரைசதம் உட்பட 317 ரன்கள் எடுத்து அசத்தி வருகிறார். ஆனால், பாகிஸ்தான் சார்பில் இத்தொடரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் 6 போட்டியில் 1 அரைசதம் உட்பட 172 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பேட்டிங்கில் இலங்கை சற்று வலிமையானதாக இருந்தாலும் பந்துவீச்சில் இரு அணிகளும் சம வலிமையுடன் விளங்குகின்றன. இலங்கையின் மெண்டிஸ், மலிங்கா, பாகிஸ்தானின் குல், அஜ்மல் ஆகியோர் தலா 6 போட்டியில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
இதனால் இன்றைய பைனலில் யாருக்கு கோப்பை என்பதை கடைசி பந்து வரை முடிவு செய்ய முடியாது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications