சிட்னி: பெண்கள் உலக கோப்பை தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு தகர்ந்து போனது. கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய போதிலும் பைனலுக்கு நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்நிலையில் இன்று இந்திய பெண்கள் அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. இந்திய அணி பைனலுக்கு நுழைய இப்போட்டியில் வெல்ல வேண்டும். அதே சமயத்தில் மற்ற போட்டிகளில் நியூசிலாந்து, பாகிஸ்தானிடமும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடமும் தோற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ், இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 84 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்து வென்றது.
ஆனால், மற்ற போட்டிகளி்ல் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. நியூசிலாந்து 223 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தின. இதையடுத்து இந்திய அணியின் பைனல் வாய்ப்பு பறிபோனது.
சூப்பர் 6 சுற்றின் முடிவில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று பைனலுக்கு முன்னேறின. பைனல் வரும் 22ம் தேதி நடக்கிறது. வரும் 21ம் தேதி நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.