டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் விருதுகளுக்கு இந்திய கேப்டன் டோணி, நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், இஷாந்த் சர்மா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் உலகின் ஆஸ்கர் என கருதப்படுவது ஐசிசி விருதுகள். இந்த விருதுகளின் பல்வேறு பிரிவுகளுக்கு டோணி, சச்சின், யுவராஜ் சிங், இஷாந்த் சர்மா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
டோணியின் பெயர் ஒரு நாள் போட்டி மற்றும் டுவென்டி 20 பிரிவுகளில் சிறந்த வீரர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிப் பிரிவில் சச்சின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
நாளை விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளன. துபாயில் நடைபெறவுள்ள கண்கவர் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. கிளைவ் லாயிட் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு விருதுக்குரியவர்களை தேர்வு செய்யவுள்ளது.
இந்திய கேப்டன் டோணிக்கு சிறந்த வீரர் விருது கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. டுவென்டி 20 பிரிவில் நிச்சயம் அவருக்குத்தான் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் பிரிவிலும் அவருக்கு விருது கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது. சமீபத்தில் நடந்த இலங்கை தொடரை ஸ்டைலாக அவர் வென்றது விருது பெற அவருக்கு சாதகமான அம்சமாக அமைந்துள்ளது.
விருதுப் பிரிவுகளும், பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்களும்:
சிறந்த கிரிக்கெட் வீரர்: சந்தர்பால் (வெ.இண்டீஸ்), மஹிளா ஜெயவர்த்தனா(இலங்கை), கிரீம் ஸ்மித் (தெ.ஆ.,), ஸ்டெய்ன் (தெ.ஆ.,).
சிறந்த டெஸ்ட் வீரர்: சந்தர்பால் (வெ.இண்டீஸ்), மஹிளா ஜெயவர்த்தனா(இலங்கை), கல்லிஸ் (தெ.ஆ.,), ஸ்டெய்ன் (தெ.ஆ.,).
சிறந்த ஒரு நாள் வீரர்: சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), டோனி (இந்தியா), நாதன் பிரேக்கன் (ஆஸி.,), யூசுப் (பாக்.,)
டுவென்டி-20 சிறந்த வீரர்: டோனி (இந்தியா), யுவராஜ் சிங் (இந்தியா), கிறிஸ் கெய்ல் (வெ.இண்டீஸ்), பிரட் லீ (ஆஸி.).
வளரும் வீரர்: இஷாந்த் சர்மா (இந்தியா), அஜந்தா மெண்டிஸ் (இலங்கை), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), மார்கல் (தெ.ஆ.).
சிறந்த வீராங்கனை: பிரவுனி (நியூசிலாந்து), எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து), டெய்லர் (இங்கிலாந்து), லிசா தலேகர் (ஆஸி.,).
சிறந்த நடுவர்: மார்க் பென்சன், அலீம் தர், ஸ்டீவ் டேவிஸ், ரூடி கோயர்ட்சன், சைமன் டஃபெல்.
இது தவிர இந்த ஆண்டின் சிறந்த அணிக்கான விருது உட்பட இன்னும் பல விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கங்குலிக்கு கல்தா: இதற்கிடையே இராணி கோப்பைக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செளரவ் கங்குலிக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல யுவராஜ் சிங்கும் இடம் பெறவில்லை. மாறாக டிராவிட், சச்சின், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
அணியின் கேப்டனாக கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக டோணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: அனில் கும்ப்ளே (கேப்டன்), டோனி (துணை கேப்டன்), சச்சின், டிராவிட், லட்சுமண், வாசிம் ஜாபர், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், முனாப் படேல், ஆர்.பி.சிங், அசோக் டிண்டா, பார்த்தீவ் படேல் மற்றும் பிரக்யான் ஓஜா.
இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வரும் 15 முதல் 26 ம் தேதி வரை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய ஏ அணியும் நேற்று தேர்வு செய்யப்பட்டது.
கேப்டனாக பத்ரிநாத்தும், துணை கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும் அறிவிக்கப்பட்டனர். அணி விவரம்: ராபின் உத்தப்பா, ரோகித் சர்மா, ஸ்வாப்னில் அஸ்நோட்கர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அபிஷேக் நாயர், இர்பான் பதான், பிரவீண் குமார், தவால் குல்கர்னி, பியுஸ் சாவ்லா, ரவி தேஜா, யூசுப் பதான், ஜெய்தேவ் ஷா மற்றும் ரித்திமான் சகா(கீப்பர்).