ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத்... அடுத்தது சிஎஸ்கே... அதற்கடுத்தது யார்!
Recommended Video

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நுழைந்துள்ளது. அடுத்ததாக நுழைவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தயாராக உள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 42 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லியை வென்று, பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்தது ஹைதராபாத் அணி.
11 ஆட்டங்களில் 9ல் வெற்றி பெற்று, 18 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி மேலும் 3 ஆட்டங்களில் விளையாட உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக சொந்த மண்ணில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுடன் விளையாட உள்ளது. ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளை அதன் சொந்த மண்ணில் சந்திக்க உள்ளது. இந்த நான்கில் ஒரு வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். இன்று ராஜஸ்தானுடன் மோதுகிறது.

பஞ்சாபும் தயார்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 10 ஆட்டங்களில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அடுத்து விளையாடும் நான்கில் 2ல் வென்றால் சுலபமாக பிளே ஆப் சுற்றுக்கு நுழையலாம். அடுத்ததாக கொல்கத்தா, பெங்களூர், மும்பை, சிஎஸ்கே அணிகளுடன் மோத உள்ளது.

சம நிலையில் மும்பை கொல்கத்தா
தலா 10 புள்ளிகளுடன் உள்ள மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் அடுத்து விளையாடும் மூன்று ஆட்டங்களிலும் வெல்வதுடன் ரன் ரேட்டையும் உயர்த்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. மும்பை அடுத்ததாக ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி அணிகளுடன் விளையாடுகிறது. கொல்கத்தா அணி அடுத்ததாக பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத்துடன் மோத உள்ளது.

ராஜஸ்தானுக்கும் வாய்ப்பு
8 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி, அடுத்த நான்கு ஆட்டங்களிலும் வென்றாக வேண்டும். அடுத்ததாக சிஎஸ்கே, மும்பை, பெங்களூர், கொல்கத்தாவுடன் விளையாட உள்ளது. ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் பஞ்சாப், மும்பை, கொல்கத்தா அணிகள் ஒரே ஆட்டத்தில் தோல்வியடைந்தால், ராஜஸ்தானுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்

மோசமான நிலையில் பெங்களூர், டெல்லி
பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. அடுத்ததாக நடைபெறும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், ரன் ரேட் விகிதத்தை கடுமையாக உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இந்த அணிகளுக்கு இல்லை.
இருந்தாலும், அடுத்து நடைபெற உள்ள ஆட்டங்களில் ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் தான் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications