ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்றது.
அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்றவுடன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் என இரண்டு தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மூன்றாவது தமிழக வீரராக வாஷிங்டன் சுந்தரையும் இந்த போட்டியில் களம் இறக்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

டாஸ் வென்றது மற்றும் அணி மாற்றம் குறித்து சுப்மன் கில் பேசுகையில், "நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். இது மந்தமான விக்கெட்டாக இருக்கிறது. முந்தைய போட்டிகளை விட இது மாறுபட்டு இருக்கிறது. கருப்பு நிற மண் உடையதாக உள்ளது. எனவே இது நல்ல விக்கெட்டாக இருக்கும் என நினைக்கிறேன். நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொண்டு ஆடுவோம். இதற்கு முன் இங்கு நாங்கள் நன்றாக விளையாடியிருக்கிறோம். அதே போல இப்போதும் விளையாடுவோம். ஹர்ஷத் கானுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்" என்றார்.
டாஸ் முடிவு பற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், "முதலில் பேட்டிங் செய்வது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட போகிறோம். இந்த மைதானத்தில் தான் நாங்கள் 280 (286) ரன்கள் எடுத்தோம். நாங்கள் எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்கள் பலம் என்னவோ அதில் கவனம் செலுத்த இருக்கிறோம். ஹர்ஷல் படேல் உடல்நலம் சரியில்லாததால் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உனட்கட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்" என்றார்.
பிளேயிங் 11:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ், ஹென்ரிச் கிளாசென் (வி.கீ), அனிகெட் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இம்பாக்ட் வீரர்கள்): அபினவ் மனோகர், சச்சின் பேபி, சிமர்ஜீத் சிங், ராகுல் சாஹர், வியான் முல்டர்
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (வி.கீ), ஷாருக் கான், ராகுல் தெவாட்டியா, வாஷிங்டன் சுந்தர், ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா
குஜராத் டைட்டன்ஸ் (இம்பாக்ட் வீரர்கள்): ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், அர்ஷத் கான்