ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடவுள்ளது. கடந்த வாரம் நடந்த போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி வென்ற நிலையில், தற்போது மீண்டும் இரு அணிகளும் விளையாடவுள்ளது. மும்பை அணிக்காக ஆடி வரும் திலக் வர்மா, ஐதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சீசனில் திலக் வர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸில் 231 ரன்களை விளாசி இருக்கிறார். சிறந்த ஃபார்மில் இருக்கும் அவர் சொந்த மண்ணிலும் மும்பை அணியை வெற்றிபெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் திலக் வர்மா பல்வேறு அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதில், கடந்த ஆண்டு ஐதராபாத்தில் மும்பை அணிக்காக விளையாடியபோது, வெறும் வார்ம் அப் செய்வற்காக வெளியே வந்தேன். அப்போது ரசிகர்கள் என் பெயரைக் கத்திக் கொண்டிருந்தார்கள். அது எனக்கே ஆச்சரியமான அனுபவமாக இருந்தது. தொடக்கத்தில் ரோஹித் சர்மா என் பின்னால் தான் வருகிறார் என நினைத்தேன். ஆனால் ரசிகர்கள் எனக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது புதிய அனுபவமாக இருந்தது என்றார்.
தொடர்ந்து சாம்பியன் பட்டம் வெல்லாதது தொடர்பான கேள்விக்கு, எப்போதும் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் சொல்வது ஒன்றுதான். இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற உணர்வை அனுபவித்ததே கிடையாது. 2022 சீசனில் மும்பை அணியில் இணைந்தேன். அதன்பின் ஒருமுறை கூட மும்பை அணி கோப்பையை வெல்லவில்லை.
கடந்த 3 சீசன்களும் எனக்கு சிறந்ததாக அமைந்தாலும், அணிக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு நாங்கள் முழு மனதுடன் சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா உடனான கேள்விக்கு, ஹர்திக் உடன் எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. இந்திய அணிக்காக எனது டி20 அறிமுக கேப் ஹர்திக் கைகளில் இருந்து பெற்றேன்.
கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடினேன். எப்போதும் சக வீரர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார். ஏதேனும் தவறு நடந்தால் கூட, நேரடியாகவும் தெளிவாகவும் அவர்களுடன் பேசுவார். எங்களுக்கு இடையில் நல்ல புரிதல் உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து சூர்யகுமார் உடனான நட்பு குறித்து பேசுகையில், களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியிலும் அவருடன் நட்பு உள்ளது.
மும்பை அணியில் மட்டுமல்லாமல் இந்திய அணியில் பாசிட்டிவான சூழலை உருவாக்குவார். அது எங்கள் பார்ட்னர்ஷிப்பின் போது நன்றாக வெளிப்படும். சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் எந்தவித சிக்னலும் காட்டாமலே ஓடுவோம். அதேபோல் பும்ரா மிகவும் நிதானமான வீரர். எதுநடந்தாலும், அது முகத்தில் தெரியாது.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 19வது ஓவர் வீசும்போதும், நெட்சில் பவுலிங் செய்வதை போலவே இருந்தது. பும்ராவிடம் இருக்கும் அமைதி ஆச்சரியம் அளிக்கும் விஷயம். அதை நானும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் சீசன் பற்றிய கேள்விக்கு, 2008ல் பிரெண்டன் மெக்கல்லம் 158 ரன்களை விளாசினார்.
அந்த ஸ்கோரை எப்படி அடித்தார் என்ற ஆச்சரியம் இன்னும் உள்ளது. அந்த நேரத்தில் கிரிக்கெட் பற்றிய புரிதலே எனக்கு கிடையாது. 2010ஆம் ஆண்டுதான் கிரிக்கெட்டை புரிந்து கொள்ள தொடங்கினேன். 2011ல் இந்தியா உலகக்கோப்பை வென்ற போது, நானும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். ஒரு பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என கனவு காணத் தொடங்கினேன் என்று தெரிவித்துள்ளார்.