மும்பை: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கிடைக்க பிரார்த்தனை மேற்கொள்வதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார். அதேபோல் இன்று இரவு நடக்கும் மும்பை - ஐதராபாத் இடையிலான ஆட்டத்தில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா நகரமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடிய சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் 28 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும். இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகல்கர், பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் அதிர்ச்சியையும், வருத்தமும் அடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நினைத்து பார்க்க முடியாத சோகத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இந்தியாவே அவர்களுடன் ஒற்றுமையுடன் உள்ளோம். உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாமல் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று இரவு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐதராபாத் - மும்பை இடையிலான போட்டியில் வீரர்கள், நடுவர்கள் கருப்பு பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதேபோல் இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றிக்கு முன்பும், பின்னரும் பட்டாசுகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், சியர் லீடர்ஸ் நடன நிகழ்ச்சியும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.