ஐதராபாத்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி மோசமாக விளையாடி வருவதால் ரசிகர்கள் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதிலும் ஐதராபாத் அணிக்காக ஆடிய இஷான் கிஷன் அவுட்டாகாமல் அவராகவே பெவிலியனை நோக்கி நடந்து சென்றது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.
சமீப நாட்களாக ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளை அதிகரித்து வருகிறது. ஏனென்றால் ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக இரு போட்டிகளில் கடைசி ஓவரில் 9 ரன்களை சேர்க்க முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதனால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியே மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகி பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்த நிலையில் தற்போது மும்பை - ஐதராபாத் போட்டியிலும் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் ஒய்டு சென்ற பந்தை ஷாட் ஆட முயன்றார். ஆனால் இஷான் கிஷன் அந்த பந்தை மிஸ் செய்த போதும், அது நேராக விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் கைகளுக்கு சென்றது.
மும்பை அணி வீரர்கள் யாருமே அப்பீல் செய்யவில்லை. கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பரான ரிக்கல்டன் கூட ஒய்வு என்று நினைத்து தலையை அசைத்தார். ஆனால் திடீரென இஷான் கிஷன் அவுட் என்று வெளியில் நடக்க, பின்னர் ஹர்திக் பாண்டியா அப்பீல் செய்தார். இதன்பின் நடுவர் அவுட் கொடுக்க, இஷான் கிஷன் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லாமல் 1 ரன்னுடன் நடையைக் கட்டினார்.
இஷான் கிஷனின் நேர்மையை பாராட்டி மும்பை வீரர்களே அவரை தட்டிக் கொடுத்தனர். ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது, பந்து இஷான் கிஷனின் பேட்டில் படவே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் இஷான் கிஷன் வேண்டுமென்றே வெளியேறினார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். போட்டிக்கு முன்பாகவே மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இஷான் கிஷன் பேட்டில் பந்து படாதது தெரிய வந்த போது, ஐதராபாத் அணியின் ஓய்வறையே அதிர்ச்சியடைந்தது. ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மிகப்பெரிய ஏமாற்றத்தை முகத்தில் காட்டியதோடு, இஷான் கிஷன் மீதும் டென்ஷனாகினார். இதனால் ரசிகர்களும் இஷான் கிஷனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.