SRH vs MI: சொந்த மண்ணில் மானம் போச்சு.. டாப் 4 பேட்ஸ்மேன்கள் கொடுத்த கிப்ட்.. ஷாக்கான காவ்யா மாறன்!
ஐதராபாத்: சொந்த மண்ணில் ஐதராபாத் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களும் முதல்முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து புதிய சாதனையை படைத்துள்ளனர். 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ஒருமுறை கூட இப்படி மோசமாக ஆட்டமிழந்ததில்லை. இதனால் இந்த போட்டி ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய அவமானமாக மாறி இருக்கிறது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். வான்கடே மைதானத்தில் அடைந்த தோல்விக்கு ஐதராபாத் அணி பதிலடி கொடுக்கும் என்று உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறது.

13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஐதராபாத் அணியை, 143 ரன்கள் என்ற கவுரவ இலக்கை எட்டுவதற்கு கிளாசன் - அபினவ் மனோகர் ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர். ஏனென்றால் சிறப்பாக ஆடிய கிளாசன் 44 பந்துகளில் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
எளிதாக 200 ரன்களை எடுத்திருக்கக் கூடிய பிட்சில் ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூட பொறுப்பின்றி விக்கெட்டை பறிகொடுத்துள்ளனர். இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சோகத்துடன் அமர்ந்திருந்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் 4 பேட்ஸ்மேன்கள் இணைந்து மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
இதுவரை நடந்துள்ள 18 சீசன்களில் சொந்த மண்ணில் ஐதராபாத் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்ததே கிடையாது. இந்த மோசமான சாதனையை இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் படைத்துள்ளனர். டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகியும், அபிஷேக் சர்மா 8 ரன்களிலும், இஷான் கிஷன் 1 ரன்னிலும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலமாக இந்த மோசமான சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனையில் இளம் வீரரான இஷான் கிஷனின் பங்கு மிகவும் பெரியது. ஏனென்றால் நடுவர் அவுட் கொடுக்காமல், மும்பை அணி வீரர்கள் அப்பீல் செய்யாமல் அவராகவே விக்கெட் என்று நினைத்து பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது, இஷான் கிஷனின் பேட்டில் பந்து உரசியதற்கான தடயமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications