ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் யாரும் எதுவும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆடியது பஞ்சாப் கிங்ஸ் அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 20 ஓவர்களில் 245 ரன்கள் குவித்தது. இதில் படுமோசமாக பந்து வீசியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முகமது ஷமி தான்.
ஷமி நான்கு ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அவர் வீசிய கடைசி ஓவரில் கடைசி நான்கு பந்துகளில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நான்கு சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தையும் மாற்றினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி 27 ரன்களை சேர்த்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை ஆடியது.

அந்த அணியின் துவக்க வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்திருந்தார். பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்திருந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மரண அடி அடித்தார். அவர் 36 பந்துகளில் 82 ரன்களை விளாசினார். ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களை அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 227.78 என்பதாக இருந்தது.
நெஹால் வதேரா 22 பந்துகளில் 27 ரன்கள், ஷஷாங்க் சிங் 2 ரன்கள், மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஏழாம் வரிசையில் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி இரண்டு ஓவர்களில் ரன் குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்.
19-வது ஓவரில் அவர் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். அந்த ஓவரில் எட்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஹைதராபாத் மைதானத்தில் 250 ரன்கள் கூட சேசிங் செய்ய முடியும் என்ற நிலையில் கடைசி ஓவரில் முடிந்தவரை ரன் குவிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
முகமது ஷமி வீசிய 20 வது ஓவரின் கடைசி நான்கு பந்துகளிலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வரிசையாக நான்கு சிக்ஸர்களை அடித்தார். இதை அடுத்து அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. மார்கஸ் ஸ்டோய்னிஸ் வெறும் 11 பந்துகளில் 34 ரன்கள் அடித்திருந்தார். அவர் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 309.09 என்பதாக இருந்தது.
முகமது ஷமி தான் வீசிய நான்கு ஓவர்களில் 75 ரன்கள் வாரி இறைத்திருந்தார். எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. இது அவரது மோசமான பந்துவீச்சு செயல்பாடாக பதிவானது. மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே இது இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சாகும். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
செய்தி சுருக்கம்:
ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 245 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணியின் ப்ரியான்ஷ் ஆர்யா, பிரபுசிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.
கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் முகமது ஷமி பந்துவீச்சில் நான்கு சிக்ஸர்கள் அடித்தார்.
முகமது ஷமி நான்கு ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக் கொடுத்தது மோசமான பந்துவீச்சாக பதிவானது.