IPL 2025: முகமது ஷமி அவமானகரமான சாதனை.. ஐபிஎல் வரலாற்றிலேயே மோசமான பவுலிங் இதுதான்
ஹைதராபாத்: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார் முகமது ஷமி. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது பந்துவீச்சு மோசமாக அமைந்தது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முகமது ஷமி இந்த போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். 4 ஓவர்களில் 75 ரன்களை வாரி இறைத்தார். அதிலும் அவர் வீசிய கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நான்கு சிக்ஸர்களை அடித்ததால் அந்த ஓவரில் மட்டுமே 27 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

முகமது ஷமி 75 ரன்கள் விட்டுக் கொடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். 2025 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களில் 76 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். அதுவே ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சாகும்.
அந்த சாதனை நடந்து சில நாட்கள் ஆன நிலையில் தற்போது முகமது ஷமி இரண்டாவது மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார். இவர் 75 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோகித் சர்மா 73 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அது மூன்றாவது மோசமான ஐபிஎல் பந்துவீச்சாக உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சுகள்:
0/76 - ஜோஃப்ரா ஆர்ச்சர் (RR) vs SRH, ஹைதராபாத், 2025
0/75 - முகமது ஷமி (SRH) vs PBKS, ஹைதராபாத், 2025
0/73 - மோஹித் சர்மா (GT) vs DC, டெல்லி, 2024
0/70 - பசில் தம்பி (SRH) vs RCB, பெங்களூரு, 2018
0/69 - யாஷ் தயாள் (GT) vs KKR, அகமதாபாத், 2023
தற்போது இந்திய அளவில் மிக மோசமான ஐபிஎல் பந்துவீச்சை பதிவு செய்தவர் என்ற சாதனைக்கு முகமது ஷமி சொந்தக்காரராகி இருக்கிறார். முகமது ஷமி இப்போதும் இந்திய அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் அவரது இந்த செயல்பாடு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 46.6 என்பதாகவும், ஒரு ஓவருக்கு சராசரியாக விட்டுக் கொடுக்கும் ரன்கள் 11.09 என்பதாகவும் உள்ளது.
இது மிக மோசமான செயல்பாடாக இருப்பதால் முகமது ஷமி மீது கவலை அதிகரித்துள்ளது. அவர் இனிவரும் போட்டிகளில் தனது ஃபார்மை மீட்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications