IND vs SL: ஒரே பந்தில் இந்திய அணி சோலியை முடித்த அர்ஷ்தீப் சிங்.. பொங்கிய ரசிகர்கள்
கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி டை-யில் முடிந்தது. இந்திய அணி இந்த போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று இருக்க முடியும். 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் 10வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அர்ஷ்தீப் சிங் செய்த தவறான காரியத்தால் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த போட்டி டை-யில் முடிந்தது.
இதை எடுத்து அர்ஷ்தீப் சிங், தான் ஒரு பெரிய பேட்ஸ்மேன் என்ற எண்ணத்தில் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழந்ததாக ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் பாதியில் வரிசையாக விக்கெட்களை இழந்து 101 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. அதன் பின்னர் சுதாரித்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.
231 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அபாரமான துவக்கம் அளித்தார். அவர் 47 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று ஆடவில்லை. ஆறாவது மற்றும் ஏழாவது வரிசையில் களமிறங்கிய கேஎல் ராகுல் 31 ரன்கள் மற்றும் அக்சர் பட்டேல் 33 ரன்கள் எடுத்தனர்.
அதன் பின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலையில் சிவம் துபே பின்வரிசை வீரர்களுடன் இணைந்து விரைவாக ரன் சேர்த்தார். அவர் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இருந்தபோது இந்தியா 230 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்தது. அதற்கு அடுத்து அவர் ஒரு ரன் எடுத்திருந்தாலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கும்.
துரதிஷ்டவசமாக சிவம் துபே அசலங்கா வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆனார். இந்தியா 9 விக்கெட்களை இழந்தது. ஒரு விக்கெட் எடுத்தால் இலங்கை போட்டியை டை செய்யலாம் என்ற நிலை இருந்தது. மறுபுறம், இந்திய அணியின் கைகளில் 15 பந்துகள் இருந்தன. அந்த 15 பந்துகளில் ஒரு ரன் எடுத்தாலும் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், கடைசி பேட்ஸ்மேன் ஆக களத்துக்கு வந்த அர்ஷ்தீப் சிங் தான் சந்தித்த முதல் பந்தை தடுத்து ஆடாமல் ஷாட் அடிக்க நினைத்து பேட்டை சுழற்றினார். ஆனால், அசலங்கா வீசிய சுழற் பந்து அவரது காலில் பட்டது. அவர் எல் பி டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதனால், இந்திய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனால், போட்டி டையில் முடிந்தது.
தோற்க வேண்டிய போட்டியை டை செய்ததால் இலங்கை அணி உற்சாகத்தில் இருந்தது. ஆனால், வெற்றி பெற வேண்டிய போட்டியில் இந்தியா சொதப்பி டையில் முடித்து அதிர்ச்சி
அளித்தது. இதை அடுத்து ரசிகர்கள் அர்ஷ்தீப் சிங் செய்த அந்த ஒரு தவறை சுட்டிக்காட்டி அவரை கடுமையாக கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஆனால், இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்பதே உண்மை. அர்ஷ்தீப் சிங்கை மட்டும் குறை சொல்வது சரியல்ல எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications