ஆசிய கோப்பை: 5வது முறையாக வென்று இந்தியாவின் சாதனையை சமன் செய்தது இலங்கை
மிர்புர்: நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி 5-வது முறையாக மகுடம் சூடியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வந்தது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இலங்கை, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறின. நேற்று இந்த இருஅணிகளுக்கான பலப்பரீட்சை மிர்புரில் நடைபெற்றது. அதில் இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சில சுவாரஸ்ய துளிகள்....

சமன் செய்தது...
இலங்கை அணி ஆசிய கோப்பையை வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் (5 முறை) சாதனையை சமன் செய்தது.

தோல்வியே இல்லை....
இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி தோல்வியே சந்திக்காமல் (5 ஆட்டத்திலும் வெற்றி) கோப்பையை நுகர்ந்துள்ளது.

தொடக்கத்திலேயே வீழ்ச்சி....
இலங்கை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இப்போது இறுதி ஆட்டத்தில் மீண்டும் அவர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேற்றுமையில் ஒற்றுமை...
முதல் மற்றும் கடைசி என இந்த இரண்டு ஆட்டத்திற்கும் சில ஆச்சரியமான ஒற்றுமைகள் உண்டு. அதாவது இவ்விரு ஆட்டங்களிலும் இலங்கை வீரர் திரிமன்னே சதம் அடித்திருந்தார். இரண்டு முறையும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தலா 5 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.

அதிக ரன்....
இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இலங்கையின் திரிமன்னே முதலிடத்திலும் (2 சதத்துடன் 279 ரன், 5 ஆட்டம்), பாகிஸ்தானின் உமர் அக்மல் (253 ரன், 5 ஆட்டம்) 2-வது இடத்திலும், இலங்கையின் சங்கக்கரா (248 ரன், 5 ஆட்டம்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்டுகள்....
பந்து வீச்சாளர்களில் மலிங்கா (இலங்கை), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்) தலா 11 விக்கெட்டுகளை சாய்த்து முதலிடம் வகிக்கிறார்கள். அஜந்தா மென்டிஸ் (இலங்கை), அஸ்வின் (இந்தியா), முகமது ஷமி (இந்தியா) ஆகியோர் தலா 9 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications