மீண்டும் புயலாக மாறி அசரடித்த அஸ்வின்.. 205 ரன்களில் ஆல்அவுட்டான இலங்கை
நாக்பூர்: 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து வெறும் 205 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது இலங்கை அணி. கொல்கத்தாவில் மழை இடையூறுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்த நிலையில் நாக்பூரில் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, மாற்றமின்றி களமிறங்கியது.

அணியில் மாற்றம்
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டஉள்ளன. ஷிகர் தவானுக்கு பதில் முரளி விஜய், முகமது ஷமிக்கு பதில் இஷாந்த் ஷர்மா, புது மாப்பிள்ளை புவனேஸ்வர் குமாருக்கு பதில் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

ஆல்அவுட்டான இலங்கை
இதனிடையே தேனீர் இடைவேளை நேரம் கழித்த ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை 205 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. கேப்டன் சண்டிமால் அந்த அணியில் அதிகபட்சமாக 57 ரன்களும், தமுத் கருணரத்னே 51 ரன்களும் எடுத்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

அஸ்வின் அபாரம்
இந்திய தரப்பில் அஸ்வின் 4, இஷாந்த் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வாரி எடுத்தனர். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வினின் கலக்கல் பந்து வீச்சாக இது அமைந்தது.

மோசமான சாதனை
கொல்கத்தா டெஸ்டில் அதிகம் பந்துவீச இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் விக்கெட் எதையுமே வீழ்த்த முடியவில்லை. ஜடேஜாவும் அந்த டெஸ்டில் விக்கெட் வீழ்த்தவில்லை. இந்தியாவில் நடந்த ஒரு டெஸ்டில் ஸ்பின்னர்கள் விக்கெட் எதையும் வீழ்த்தாத மோசமான சாதனையை அவர்கள் படைத்திருந்தனர்.
இதனிடையே இந்தியா முதல் இன்னிங்சை தடுமாற்றத்தோடே தொடங்கியுள்ளது. ஆட்ட நேர இறுதியில் 11 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது இந்தியா. லோகேஷ் ராகுல் 7 ரன்களில் அவுட்டான நிலையில், முரளி விஜய் மற்றும் புஜாரா தலா 2 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்கள்.


Click it and Unblock the Notifications