தோனி மாதிரி ஓடி வந்திருந்தா ஜெயிச்சுருக்கலாமே.. இலங்கை விக்கெட் கீப்பருக்கு குவியும் அட்வைஸ்!!
கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, கடைசி பந்தில் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டதால், போட்டி இலங்கை அணியின் கையில் இருந்து நழுவியது. சில ரசிகர்கள் தோனி போல டிக்வெல்லா செய்திருந்தால், ரன் அவுட் செய்திருப்பார் என கூறி வருகின்றனர்.

என்ன நடந்தது?
முதல் டி20யில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக பேட்டிங் செய்து வந்தாலும், கடைசி சில ஓவர்களில் விக்கெட்டை விரைவாக இழந்தது.

கடைசி ஓவர்
தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி பந்தில் அந்த அணியின் இம்ரான் தாஹிர் அடித்த பந்து இலங்கை அணியின் விக்கெட் கீப்பரிடம் சென்றது.

சூப்பர் ஓவர் வெற்றி
விக்கெட் கீப்பர் டிக்வெல்லா பந்தை பிடித்து எறிந்தார். ஆனால், அது தவறிச் சென்றது. இதனிடையே, தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ஒரு ரன் ஓடி முடித்தனர். இதனால், போட்டி டை ஆனது. பின்னர், சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 15 ரன்கள் குவிக்க, இலங்கை அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தோனி போல..
டிக்வெல்லா பந்தை பிடித்து எறியாமல், தோனி போல வேகமாக ஓடி ஸ்டம்ப் அருகே வந்து ரன் அவுட் செய்திருக்கலாம் என்பதை பல ரசிகர்கள் குறிப்பிட்டனர். எனினும், டிக்வெல்லா இந்த போட்டியில் மூன்று ரன் அவுட்கள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications