
மாறிய காட்சிகள்
உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் காட்சிகள் வெகுவாக மாறி உள்ளது. தோனி அணியில் இருந்து விலகத் துவங்கி இருக்கிறார். அவர் விலகும் அளவுக்கு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் இருப்பார் என்ற முடிவுக்கு வந்துள்ளது இந்திய அணி.

ரிஷப் பந்த் சந்தேகம்
இதுவரை டெஸ்ட் அணியில் மட்டுமே விக்கெட் கீப்பராக இருந்து வந்தார் ரிஷப் பந்த். தோனி இல்லாத நிலையில், இனி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கும் ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இது நீடிக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளது. அதற்கு காரணம், ஸ்ரீகர் பரத்.

ஸ்ரீகர் பரத் சதம் அடித்தார்
ஸ்ரீகர் பரத் ஆந்திரப் பிரதேச அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன இவர், இந்தியா ஏ அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அசத்தினார்.

அசத்தல் விக்கெட் கீப்பர்
கடந்த மூன்று இந்தியா ஏ தொடர்களில் மூன்று சதங்கள் மற்றும் 50 விக்கெட் வீழ்ச்சிகள் செய்துள்ளார். அதனால், தேர்வுக் குழுவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பரத். டெஸ்ட் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக வேண்டிய வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் பரத்.

விரிதிமான் சாஹாவுக்கு வாய்ப்பு
தற்போது டெஸ்ட் அணியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இருக்கிறார். அவருக்கு முன் இருந்த விரிதிமான் சாஹா இரண்டாம் விக்கெட் கீப்பராக அணியில் இருக்கிறார். அவருக்கு பதில் ஸ்ரீகர் பரத்தை அணியில் இடம் பெறச் செய்ய விவாதம் நடந்துள்ளது. எனினும், சாஹாவுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டனர்.

ரிஷப் பந்த் கவனம்
எனினும், ஸ்ரீகர் பரத் அனைவரின் பார்வையிலும் பட்டு விட்டதால், ரிஷப் பந்த் சரியாக ஆடாத பட்சத்தில் பரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால், ரிஷப் பந்த் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தொடரில் சரியாக ஆடவில்லை என்றாலும், ஸ்ரீகர் பரத் பற்றி விமர்சகர்கள் பேசத் துவங்கி விடுவார்கள். பேட்டிங்கில் மட்டுமில்லாமல், விக்கெட் கீப்பிங்கிலும் ரிஷப் பந்த் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications