தோல்வியில் இருந்து தப்பியது இலங்கை! இந்தியாவும் தான்….
கோல்கத்தா: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியில் தோல்வியில் இருந்து இலங்கை தப்பியது. இந்திய அணியும், இலங்கைக்கு எதிராக இந்தியாவில் தோற்றதில்லை என்ற சிறப்பை தக்க வைத்துக் கொண்டது.
மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டி, மூன்று டி-20 போட்டித் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. டெஸ்ட் போட்டித் தொடர், கோல்கத்தாவில் துவங்கியது.
மழையின் காரணமாக, முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் தடைபட, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 294 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

திணறிய இலங்கை அணி
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பவுலர்கள் அசத்தினர். 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்ற நிலையில் இலங்கை தடுமாறியது.

டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்
போட்டியின் நிலைமை தலைகீழாக மாறியது. இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே முடிக்கப்பட்டது. அதையடுத்து முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

சாதனையை தக்க வைத்தது
2015ல் இருந்து தொடர்ந்து, எட்டு டெஸ்ட் போட்டித் தொடரை வென்று, உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை நடந்துள்ள 17 டெஸ்ட் போட்டிகளில் 10ல் இந்தியா வென்றுள்ளது. 7 டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் கூட இலங்கை வென்றதில்லை. கோல்கத்தா போட்டி டிராவில் முடிந்ததால், தோல்வியில் இருந்து இலங்கை தப்பியது.

தோற்றதில்லை
இலங்கைக்கு எதிராக இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்றதில்லை என்ற சிறப்பை இந்திய அணி தக்க வைத்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் வரும் 24ம் தேதி துவங்குகிறது.


Click it and Unblock the Notifications