இடிக்கப்படுகிறது காலே கிரிக்கெட் மைதானம்.... நவம்பரில் கடைசி போட்டி!
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச் சின்னமாக பார்க்கப்படும் காலே கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாது. அதில் உள்ள காலரிகள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.
இலங்கையின் காலேயில் உள்ள கிரிக்கெட் மைதானம் உலகப் புகழ் பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிச் சின்னமாகவும் அந்த மைதானம் உள்ளது.
1998ல் இருந்து இங்கு பல்வேறு சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. 2010ல் இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த மைதானத்தில்தான் 800வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, 500வது டெஸ்ட் விக்கெட்டை இந்த மைதானத்தில்தான் வீழ்த்தினார்.
இந்த மைதானம் இலங்கை அணிக்கு மிகவும் ராசியான மைதானமாகவும் உள்ளது. கடைசியாக கடந்த வாரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தி்ல வென்றது.

புதிய காலரியால் பிரச்னை
2004ல் சுனாமி தாக்கியதில் இந்த மைதானம் சேதமடைந்தது. அதன்பிறகு புதிய காலரி உள்ளிட்டவை கட்டப்பட்டன. இந்த மைதானத்துக்கு அருகில், போர்ச்சுகீசியர்களால், 1505ல் கட்டப்பட்ட கோட்டை உள்ளிட்டவை உள்ளன.

பாரம்பரிய சின்னம்
தற்போது புதிய காலரி கட்டப்பட்டதால், அந்தக் கோட்டை மறைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டடங்களில் ஒன்றாக இந்தக் கோட்டை உள்ளது. பெவிலியன்களை அகற்றாவிட்டால், பாரம்பரிய கட்டட அந்தஸ்து விலக்கி கொள்ளப்படும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.

நவம்பரில் கடைசி போட்டி
அதனால், வரும் நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிக்குப் பிறகு, காலே மைதானத்தில் போட்டிகளை நடத்துவதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கோட்டையை மறைக்கும் காலரிகளை இடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் சோகம்
அரசின் முடிவுக்கு இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தாங்கள் விளையாடிய, நாட்டுக்கு பெருமையை தேடித் தந்த காலே மைதானத்தில் தொடர்ந்து போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.


Click it and Unblock the Notifications