ஐயா அம்பயரே!! இவர் வீசிய 30 பந்தில் 12 நோ-பால்.. ஒண்ணு கூடவா கண்ணுக்கு தெரியலை?
கொழும்பு : இலங்கை - இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் சண்டகன் ஏராளமான நோ-பால்கள் வீசியுள்ளார்.
ஆனால், அம்பயர்கள் ஒரு நோபாலை கூட தாங்களாக கண்டுபிடிக்கவில்லை. இரண்டு முறை ரிவ்யூவின் போது நோ-பால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விஷயம் கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. சிலர் சண்டகனுக்கு ஆதரவாகவும், சிலர் அம்பயர்களுக்கும், சண்டகனுக்கும் எதிராகவும் கருத்து கூறி வருகின்றனர்.

இரண்டுமே அவுட் கிடையாது
இலங்கை - இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு முறை சண்டகன் பந்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால், அந்த பந்துகள் நோ-பால் என தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டு கூறப்பட்டது. அடுத்து மீண்டும் ஜோஸ் பட்லர் 64 ரன்களில் சண்டகன் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த பந்தும் நோ-பால் போலவே இருந்தது.

12 நோ-பால்கள் வீசினார்
இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் இந்த போட்டியை ஒளிபரப்பிய ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சண்டகன் அன்று காலையில் வீசிய ஐந்து ஓவர்களில் எப்படி பந்து வீசினார் என எடுத்துக் காட்டியது. அதில் 30 பந்துகளில் சுமார் 12 பந்துகள் நோ-பால்.

கூடுதல் ரன்கள் போச்சே!
ஆனால், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்த போது ரிவ்யூவில் கண்ட இரண்டு நோ-பால்கள் தவிர்த்து மற்றவை எதையும் அம்பயர்கள் கண்டுபிடிக்கவில்லை. இது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி கூடுதல் ரன்களை இழந்து விட்டது என்பதும் ஒரு காரணம்.

கோபத்தில் ரசிகர்கள்
சுழற் பந்துவீச்சாளாரான சண்டகன் பந்து வீசும் முறை காரணமாக அம்பயர்களால் பந்து வெளியாகும் போது அவரது கால்களை கவனிக்க முடிந்திருக்காது எனவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் இந்த சம்பவத்தால் சண்டகன் மீதும், அம்பயர் சுந்தரம் ரவி மீதும் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

அடிப்படையே பிரச்சனை ஆகி உள்ளது
மறுபுறம், சிலர் சண்டகன் முதல் சில நோ-பால்களின் போது நோ-பால் கொடுக்கப்பட்டு இருந்தால் அடுத்த பந்துகளை நோ-பால் ஆக வீசி இருக்க மாட்டார் எனவும் கூறுகிறார்கள். கிரிக்கெட்டின் அடிப்படை விஷயமான நோ-பால் தற்போது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications