கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற 258 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணியின் நிஷாங்கா - கருணதர்னே கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் கருணரத்னே 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு தொடக்க வீரர் நிஷாங்கா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய குசல் மெண்டிஸ் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சமரவிக்ரமா வங்கதேச பவுலர்களை தனியாளாக எதிர்த்து விளையாடினார்.
இன்னொரு பக்கம் வந்த அசலங்கா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தனஞ்செயா டி சில்வா 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து வந்த கேப்டன் ஷனகா சமரவிக்ரமாவுக்கு கம்பெனி கொடுக்க, அவர் அரைசதம் கடந்தார். இதன் காரணமாக இலங்கை அணி 43 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை கடந்தது. இதன்பின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று இலங்கை அணி அதிரடிக்கு மாறியது.
இதன் காரணமாக ஷனகா 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இன்னொரு பக்கம் சமரவிக்ரமா பவுண்டரியும், சிக்சருமாய் வெளுத்து கட்டினார். சிறப்பாக ஆடிய அவர் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி பந்தில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் மற்றும் ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டுகளையும், சொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வங்கதேச அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை இலங்கை அணி படைக்கும் என்று பார்க்கப்படுகிறது.