நடத்தை விதிகளை மீறினார்... இலங்கை கிரிக்கெட் வீரர் திடீர் சஸ்பெண்ட்!
கொழும்பு: நடத்தை விதிகளை மீறியதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலாகாவை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி இலங்கையில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில், அணியில் இருந்து தனுஷ்கா குணதிலாகா உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
நடத்தை விதிகள் மீறி செயல்பட்டதால், இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அவர் மீதான விசாரணை முடியும் வரை சர்வதேசப் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதுபோல் ஏற்கனவே பலமுறை சர்ச்சைகளில் சிக்கியவர்தான் குணதிலாகா. இந்தாண்டு ஜனவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியின்போது வங்கதேச வீரர் தமிம் இக்பால் அவுட்டானபோது, மோசமாக நடந்து கொண்டதாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கு முன்பு கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான பயிற்சியின்போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications